#Blue_whale விளையாட்டால் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள முதல் உயிரிழப்பு

தமிழகத்தில் #Blue_whale_suicide_game விளையாட்டினால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதனை தகர்த்தெறிந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மொட்டை மலை கிராமத்தில் வசித்து வந்த விக்னேஸ்வரன் எனும் கல்லூரி மாணவர் ஒருவரை தனக்கு இரையாக்கிக் கொண்டுள்ளது இந்த ஆன்லைன் திமிங்கல விளையாட்டு. இதுவரை வட மாநிலங்களிலும் ஏன் கேரளாவிலும் கூட பதின்வயதினர் இந்த விளையாட்டினால் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் இந்த விளையாட்டினால் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுதான் என்பதால், இப்போது தான் தமிழக மக்களும் அரசாங்கமும் இப்பிரச்னையில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் இந்த இணைய விளையாட்டினால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாடியிலிருந்து குதித்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களாக வீட்டிலும், உறவினர்களுடனும் நண்பர்களுடனும் எதுவும் பேசாமல் ஒருவிதமான குழப்ப மனநிலையோடு விக்னேஷ் இருந்ததாகக் கூறப்படுகிறது. புளூவேல் விளையாட்டின் கடைசி நிலை தான் தற்கொலை செய்து கொள்வதாகும். இதற்கு முன்பு நடு ராத்திரிக்கு எழுந்து மாடியின் உச்சிக்கு சென்று விளிம்பில் நிற்பது, விடியற்காலை 4 மணியளவில் கொடூரமான திரைப்படங்களை பார்ப்பது, மனதை வன்மமாக்கும் கொடூர இசையை கேட்பது. கைகளில் பிளேடால் கிழித்துக் கொள்வது போன்ற செயல்களை இந்த விளையாட்டில் ஈடுபடுவோர் செய்துவருவர். இந்நிலையில் நேற்று விக்னேஷின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் புளூவேல் விளையாட்டின் கடைசி நிலைக்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். அதாவது வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

அதுமட்டுமன்றி அவரது கையில் திமிங்கலத்தின் படத்தை வரைந்து கீழே ப்ளூவேல் என்று ஆங்கிலத்தில் எழுதியும் உள்ளார். அதுமட்டுமன்றி வீட்டில் இருந்த ஒரு நோட்டுப்புத்தகத்தில் இந்த விளையாட்டினைப் பற்றிய குறிப்பையும் எழுதிவைத்துள்ளார். அதாவது, “நீல திமிங்கலம்… இது விளையாட்டல்ல விபரீதம்… ஒருமுறை உள்ளே போனால் வெளியில் வர முடியாது” என விக்னேஷ் அதில் எழுதி வைத்துள்ளார்.

 

 

 

 

 

இந்த விளையாட்டின் கால கட்டம் 50 நாட்கள். இப்படியாக ஒவ்வொரு நாளும் கொடூர டாஸ்க்குகளை அந்த விளையாட்டில் ஈடுபடும் ஒவ்வொரு இளம்வயதினரும் செய்துவருவர். விளையாட்டின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது தன்னைப் போல இன்னொருவரை இந்த விளையாட்டில் சேர்த்துவிட்டு பின்பு தற்கொலை செய்துகொள்வார்கள்.இதைத் தொடர்ந்து இவர் உருவாக்கிய அடுத்த நபர் இந்த செயலை தொடர்வார். இப்படியாக இந்த சுழற்சி இணையத்தின் மூலம் மொழி,இனம்,எல்லைகள் தாண்டி பல இளம்வயதினரை உலகெங்கிலும் கொன்றுவருகிறது.

இதனை தடுக்கும் வழிமுறைகளை அரசாங்கமும் சைபர் க்ரைம் பிரிவும் இந்தியா முழுக்க மேற்கொண்டு வந்தாலும் இவ்விளையாட்டு வேறு சில பெயர்களிலோ எப்படியோ இன்றுவரை பரவிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் விக்னேஷ். நம் குழந்தைகளையும் சுற்றியிருக்கும் குழந்தைகளையும் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது தான் இந்த விளையாட்டிலிருந்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி. பெரும்பாலும் குழந்தைகளை தனிமையில் இருக்க விடாமல் அரவணைப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி குழந்தைகளின் உடல்களின் காயங்கள் ஏதேனும் உள்ளதா? அவர்கள் இரவு முழுதும் உறங்குகிறார்களா? அல்லது பகலில் உறங்குகிறார்களா? என்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் அவர்களது மாணவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வுகள் அரசாங்கத்தால் இன்றிலிருந்து அதிகமாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்திகளை அவசியம் வாசிக்கவும் :

[#BlueWhaleSuicideGame என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன?]

[#Blue_whale_suicide_game: இந்தியாவில் பரவிவரும் தற்கொலைகள்]

[#BlueWhaleSuicideGame மூலமாகத்தான் எனது மகன் இறந்தான் – ஒரு பெண்ணின் கண்ணீர் #Video]

[இந்தியாவில் பரவும் #Blue_whale_suicide_game: முற்றிலுமாக தடை செய்ய உத்தரவு!!]

[  #Bluewhale_suicide_game விளையாட ஆசைப்படும் மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள்]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*