
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா மருத்துவ படிப்பில் சேர முடியாததால் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
[நீட் தேர்வுக்கு எதிராக குரல்கொடுத்த மாணவி அனிதா தற்கொலை]
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இதனால் அவருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் போனது. இதனால் விரக்தியடைந்த அனிதா, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், “நீட் தேர்வு ஒரு உயிரை பறித்துவிட்டது. நீட்டை எதிர்த்து வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சாதி, மதம், கட்சி இவைகளைத் தாண்டி நாம் போராட வேண்டும். அனிதா எனக்கும் மகள்தான், அவரது மரணம் வேதனை அளிக்கிறது. அனிதா வாங்கிய மதிப்பெண்கள் அதிகம், ஒரு நல்ல மருத்துவரை நாம் இழந்துவிட்டோம். மாணவியின் மரணத்தைக் கண்டு மனம் தளரக்கூடாது, அனைத்து மாணவர்களும் நீட் தேர்வை எதிர்த்து போராட வேண்டும். மக்களும் இந்தப் போராட்டத்தில் களமிறங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply