நிரந்தரமான சுதந்திர காற்றை சுவாசிக்க காத்திருக்கிறேன் : முதல்வருக்கு பேரறிவாளன் கடிதம்!

ராஜீவ் கொலை வழக்கிலிருந்து தனக்கு நிரந்தர விடுதலை தேவை என்றும், சுதந்திர காற்றை நிரந்தரமாக சுவாசிக்க நம்பிக்கையோடு காத்திருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் வேலூர், புழல் உள்ளிட்ட சிறைகளில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனர். தண்டனை காலம் முடிந்தும் அவர்களை விடுதலை செய்ய பல முறை கோரியும் மத்தியில் ஆண்ட  அரசுகளின் முட்டுக்கட்டையால் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. தற்போது பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் பேரறிவாளனுக்கு பரோல் அளிக்கப்பட வேண்டுமென்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பேரறிவாளனை ஒரு மாத பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து  பேரறிவாளன், ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது, தினமும் காவல்துறையினரிடம் கையெழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகளோடு கடந்த 24-ஆம் தேதி  ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிச்சிருங்க : விடுதலைக்கான பயணத்தில் அற்புதம்மாளின் முதல் வெற்றி!

இந்நிலையில், பேரறிவாளனை ஒரு மாதம் பரோலில் விடுவித்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள். அப்போது பேரறிவாளனுக்கு பரோல் அளித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒருமாத காலம் பரோலை நீட்டிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். அதனையடுத்து முதல்வருக்கு பேரறிவாளன் எழுதிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தார். அந்த கடிதத்தில், தன்னை ஒரு மாதம் பரோலில் விடுவித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி என்று கூறியிருந்தார் பேரறிவாளன். மேலும் அவர் அந்த கடிதத்தில், செய்யாத குற்றத்துக்காக என் இளமையை தொலைத்து இருண்ட சிறையில் முடங்கி கிடந்தேன். இந்த வழக்கிலிருந்து எனக்கு நிரந்தரமான விடுதலை வேண்டும். சுதந்திர காற்றை நிரந்தரமாக சுவாசிக்க நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று அவர் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இது தெரியுமா : [பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய அற்புதம்மாள் முடிவு!]

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*