மாணவர் போராட்டம்: பெண் எஸ்.ஐக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி கமிஷனர்! video

பெண்களால் செய்ய முடியாது என்று சொல்லப்பட்ட எத்தனையோ துறைகளில் புகுந்து அவர்கள் சாதிக்கவும் துவங்கி விட்டார்கள். ஆனால் பணியிடங்களில் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளில் இருந்து அவர்களுக்கு விடிவில்லை. தமிழக காவல்துறையில் பெண்கள் பெருமை மிகு சாதனையாளர்களாக சிறப்பாக பணி செய்து வந்தாலும் கூட அவ்வப்போது ஆண் காவல் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகளுக்கு அவர்கள் உள்ளாவது வெளிவரத்தான் செய்கிறது.


இதை தடுக்க பாலியல் நிகர் பயிற்சிகள் பல ஆண்டுகளாக தமிழக காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது. பணியில் சேர்ந்தவர்களுக்கும் சேர்வதற்கு முந்தைய நிலையில் உள்ள காவலர்களுக்கும் கூட இந்த பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டன. பின்னர் நாளடைவில் இந்த பயிற்சிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்காமல் விட்டு விட்டனர்.
இந்நிலையில், தமிழகம் முழுக்க நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மாணவர்கள் போராடி வரும் நிலையில் இந்த போராட்டங்களை காவல்துறையினரைக் கொண்டு அரசு ஒடுக்கி வருகிறது.

இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்ய வந்த பெண் காவல் அதிகாரியிடம் ஆண் காவல்துறை அதிகாரி தவறாக நடந்து கொள்வது போன்ற விடியோ வெளியாகி உள்ளது.  வெளியாகி உள்ள அந்த விடியோவில்  கோவையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர காட்டூர் காவல்நிலைய பெண் போலீஸ் எஸ்.ஐ. (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த போராட்டத்தை ஒடுக்க வந்த உதவி கமிஷனர் ஜெயராம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வேலையை விட்டு விட்டு குறிப்பிட்ட பெண் எஸ்.ஐ.யிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் விடியோ வெளியாகி உள்ளது.

சம்பந்தமே இல்லாமல் பெண் போலீசில் மார்பில் அவர் கைவைப்பது போன்ற காட்சிகள் அந்த விடியோவில் உள்ளன. அவர் கையை  அந்த பெண் போலீஸ் தட்டி விடுவதும் தடுப்பதுமாக இருக்க   மீண்டும் மீண்டும் நெரிசலை பயன்படுத்தி உதவி கமிஷனர் பெண் மீது கைவைப்பதும் விடியோவில் பதிவாகி இருக்கிறது.சம்பந்தப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி புகார் கொடுத்த்தால் மட்டுமே இதில் உள்ள உண்மைகள் வெளிவரும். இந்த விடியோவின் உண்மை தன்மையை ஆராய வேண்டியதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டியதும் காவல்துறையின் கடமையாகும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை பேச முன் வரவேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*