சிறுத்தைகள் மாநில சுயாட்சி மாநாடு_வாசுகி பாஸ்கர்!

நேற்று முந்தைய தினம் ராயப்பேட்டையை கடக்கும் வரை மாநில சுயாட்சி மாநாடு என்று ஒன்று நடக்க போகிறது என்பது தெரியாது, நேற்று கேரளா முதல்வர் பினராயி விஜயனை திருமாவளவன் வரவேற்றபோது தான் நேரில் போய் பார்ப்போமா என்கிற ஆவல் அதிகரித்தது.

விஐபி கணக்காக மிக தாமதமாக போக மேடையில் அத்தனை விஐபிகளும் வந்திருந்தார்கள், மாநில சுயாட்சிக்கான அவசியம், மொழிவாரியாக பிரிக்கப்பட்டுள்ள மாநில உரிமைகளை பறிப்பதால் விளையும் விளைவுகள், அதன் அவசியம் என்ன என்பதை சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்தியவை, பேறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சை முழக்கம், கலைஞரின் முழக்கம் எல்லாம் காணொளியாக திரையில் ஒலியிடப்பட, அதை மேடையில் இருந்த தலைவர்கள் அரங்கத்திற்குள் நுழையும் போதே பார்த்து கொண்டிருந்தார்கள். இன்றைய தேதிக்கு அந்த வரலாற்று விவகாரங்கள் மீண்டும் அசைபோடப்பட வேண்டியவை என்கிற முக்கியவத்தோடு மாநாடு ஆரம்பித்தது சிறப்பு.

சுயாட்சி மாநாட்டின் விளம்பர design களை பார்த்தேன், மாநில உரிமை என்கிற பெயரில் இந்திய வரைபடத்தில் இருந்து தமிழகத்தை தனியாக பிரித்து மாநில உரிமை கோரும் விதமாக இல்லாமல், மொழிவாரியாக பிரிக்கப்பட்டுள்ள, பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு மாநில உரிமைகளும் தலையீடில்லாமல்அவரவருக்கு கொடுக்கப்பட்டாக வேண்டும், மத்திய அரசின் அதிகார குவிப்பை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய காலத்தின் அவசியம் இருப்பதற்கு இணங்க இந்திய வரை படத்தில் அனைத்து மாநில உரிமைகளையும் மீட்டாக வேண்டும் என்கிற அடிப்படையில் விளம்பர design கள் அமைக்க பட்டு இருந்தது. அதே அவசியத்தோடும் தான், கேரளா முதல்வர் பினராயி, புதுவை முதல்வர் நாராயணசாமி போன்றோரை வரவழைத்து இருந்திருக்கிறார்.

பெரும் கோவ உணர்ச்சியோடு பேச வேண்டிய விவகாரத்தை, தனக்கே உரிய கனிவான குரலோடு, மிக அழுத்தமாக தனது விமர்சனத்தை வைத்தார் பினராயி விஜயன். திருநாவுக்கரசு, நாராயணசாமி போன்ற காங்கிரஸாரின் பங்கும் மேடையில் இருந்தாலும், அதே மேடையில்; ”மாநில உரிமைகளை காங்கிரஸ் பறித்தது, பாஜக வேறு சில ஆபத்தான எல்லைகளுக்கு அதை விரிவு படுத்துகிறது” என்று பினராயி பேசியது, காலத்தின் அவசியத்தால் ஒன்று கூடி விவாதிக்கும் பொருட்டு திரண்டு இருக்கிறோம், மாற்று கருத்துகள் இருந்தாலும், கூடி எதிர்ப்பது அவசியம் என்கிற நாகரீக, முதிர்ந்த அரசியல் மேடையாக்கிவிட்டு அமர்ந்தது highlight

இன்னமொரு சிறப்பான பேச்சு தோழர் ஜவாஹிருல்லாஹ் வின் உரை. வரலாற்று சம்பவங்களோடு குறிப்பிட்டு, மாநில உரிமைகளை பறிக்கும் பாசிச பாஜக அரசாங்கத்தால் விளையப்போகும் பேராபத்தான சிக்கல்களை பேசி அமர்ந்தார்.

மாநில சுயாட்சி என்பது தமிழகத்திற்கான கோரிக்கையல்ல, பாஜகவை எதிர்க்கும் கோரிக்கையல்ல, பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் சேர்த்து, பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் சேர்த்து தான், பறிக்கப்படும் மாநில உரிமைகளை பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறோம், திமுக ஏன் வரக்கூடாது என்பதில் பாஜக விற்கு இருக்கும் கவனமே சமூகநீதி சாத்தியப்பட்டுவிட கூடாது என்பது தான் நோக்கமே என்று ஸ்டாலின் இறுதியாக பேசி, அம்பேத்கரின் அரசியலை திருமா முன்னெடுப்பதை பார்த்தால், நிச்சயம் அம்பேத்கர் கொஞ்சம் உறங்குவார் என்று தொடர்ந்தார்.

மாநாட்டு தீர்மானங்களை மட்டுமே ஆரம்பத்தில் படித்து விட்டு அமர்ந்த திருமா வின் வழக்கமான உரை இல்லையோ? என்கிற சலசலப்புக்கு இடையே இறுதியாக அவர் பேசுவார் என்கிற தகவலோடு தொடர்ந்த கூட்டத்தின் இறுதியில், ஸ்டாலினை அழைப்பதற்கு முன்னே திருமா பேசியதில் ஒன்று தெளிவாக புரிந்தது,

பெரியார் ஆகட்டும், அம்பேத்கர் ஆகட்டும், அவர்களின் கருத்துக்களை நிறைவாக உள்வாங்கிய ஒரு சமூகமாக, இந்தியாவின் முன்னோடியாக என்றுமே தமிழகம் இருக்கும் என்கிற நம்பிக்கை அந்த உரையில் இருந்தது. இந்தி திணிப்புக்கு எதிரான குரலாக இருக்கட்டும், மாநில உரிமைகளுக்கு எதிரான குரலாக இருக்கட்டும், சமூகநீதிக்கு எதிரான குரலாக இருக்கட்டும், தமிழகம் குறைந்தது நூறு வருட முன்னோக்கி சிந்திக்கும் அளவு தலைவர்களை உள்வாங்கி, வட இந்திய மாநிலங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட நாட்டின், தங்கள் மொழி, தங்கள் பண்பாடு சிதைக்கப்பட்டு கொண்டிருப்பதை உணராமல், “‘ஒரே மொழி, ஒரே தேசம்” என்கிற பேராபத்தை உணராமல் இருக்கிற இதே வேளையிலே, திருமா அவர்களின் உரை, இந்திய மாநில சுயாட்சிக்கான அவசியம் இருக்கும் கால கட்டத்தில் ஒரு வரலாற்று உரையாக இருக்க போகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்த ஆபத்துக்கள் கழுத்தை நெறிக்கும் போது, பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் வரும் போது, ”நாங்க எல்லாம் இதை அப்போவே சொல்லிட்டோம் டா” என்று குறிப்பிட்டு காட்டப்போகும் முன்னோட்டமாக பேசினார்.

”அவர்கள் விரும்புவது digital india , நாங்கள் விரும்புவது federal இந்தியா” என்கிற திருமாவின் ஒற்றை வரி தான் மொத்த பேச்சுக்குமான சுருக்கம். அதிமுக அரசின் கழுத்தை நெரித்து, அடிமையாக்கி வைத்திருக்கும் அதிமுக வுக்கும் சேர்த்து தான் இந்த மேடை மாநில சுயாட்சி குறித்து பேசி கொண்டிருக்கிறது, இந்த மேடையில் இருப்பவர்களுக்குள் முரண்பாடுகள் உண்டு, ஆனால் முதலில் மாநிலத்தின் உரிமைகளை மீட்போம், யார் ஆட்சியில் இருந்தாலும் அது மாநிலத்துக்கு உட்பட்ட அதிகார வளையத்திற்குள் அந்த ஆட்சி இருக்க வேண்டும், நம் அரசியலை பின்பு பார்த்துக்கொள்ளலாம், அரசியலில் என்னால் சாத்தியப்படும் தூரம் எனக்கு தெரிகிறது, ஆகையால், இது அரசியல் கூட்டணிக்கு அச்சாரமான மேடையாக சிலர் திரித்து கூறலாம், இது அரசியல் மேடையல்ல, சமூகநீதிக்கு எதிரான போக்கு உடைய இந்த கால கட்டத்தில் நாம் ஒன்றிணைந்து மாநில உரிமைகளை மீட்கும் பொறுப்பு இருக்கிறது, திமுக செயல் தலைவருக்கும், திமுகவுக்கும் இதை இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டிய கடமை இருக்கிறது, என்கிற கோரிக்கையோடு உரையை இறுதி செய்தார்.

திருநாவுக்கரசு, நாராயணசாமி மேடையில் இருக்கும் போதே, ஜவஹர்லால் நேருவின் constituion புரிதல் குறித்தும், அவரின் பங்கு குறித்தும், மாநில உரிமைகள் குறித்தும் அவரின் பங்கை விளக்கி, ”காங்கிரஸ் காரர்களே நேருவை” புரிந்து கொள்ளும் விதமாக revision செய்து விளக்கியது ஊமைக்குத்து.

முழுமையான உரையையும் இங்கே தொகுக்க முடியவில்லை என்றாலும், திருமாவின் இந்த மாநாட்டு ஏற்பாடும், அதன் முக்கியவத்தமும், அங்கே விவாதிக்க பட்ட விவகாரங்களும், நிச்சயம் இந்த மொத்த இந்திய ஒன்றியத்துக்கு முன்னோட்டமாக இருக்கும், ”நானும் சிஎம் ஆக போகிறேன்” என்று ஆளாளுக்கு கிளம்பி இருக்கும் நடிக கோமாளிகள் சூழ் ”சிதை அரசியல்” கால கட்டத்தில் தான், constitution ஐ படித்து உணர்ந்த இந்த உரையின், பேச்சுக்களின், சித்தாந்தங்களின் முக்கியத்தவத்தை நாம் உணர்வோம் என்பதை ஜோசியமாகவே சொல்லி வைக்கிறேன்.

இந்த தீர்மானங்கள் மீது மொத்தமாக ஏற்புடையவரும், இதை விவாத பொருளாக்காமல், ”இதை நிகழ்த்தி காட்டியது திருமா” என்கிற ஒற்றை காரணத்திற்காக பலரிடையே நிலவும் மயான மௌனம் கலையும் நாள் தான், உண்மையான சமூகநீதி நிறுவப்படும் நாள். ஏனினில் அந்த மேடையின் மொத்த குரல்களும் எனக்கான குரலாக கேட்டது, பல தலைவர்கள் போராடி பெற்று தந்த நீதியை just அசைபோடும் ஒரு கூட்டமாக, நம்மை நாமே உறுதிப்படுத்தி கொள்ளும் கூட்டமாக தான் இருந்தது, இதை யார் முன்னெடுத்து செய்தாலும் வரவேற்போம்.

மாநில உரிமைகளை மொத்தமாக தொலைத்து, அடிமை சிரிப்பு சிரித்து கொண்டிருக்கும் இந்த வேளையிலே, ”இந்த கூட்டமெல்லாம் தேவையா?” என்று சாலையை கடக்கும் மனநிலை உங்களுக்கு இருந்தால், நேற்று பேசியது தீர்வுக்கான குரல் என்று சொல்லவில்லை, அது ஒரு அழுத்தமான ”எதிர்ப்பு குரல்”. அறிஞர் அண்ணா காலத்திற்கு, அம்பேத்கர் காலத்திற்கு பின் சென்று, இந்த உரிமை குரல்கள் இன்னும் வலிமை பெறட்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*