‘ஜெ’ மரணம் மர்ம முடிச்சுகள்: ஸ்டாலின் கேள்வி…!

ஜெயலலிதா மரண சர்ச்சை மீண்டும் அதிமுகவினரால் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்:-
“மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தபோது அவரது உடல்நிலை குறித்து தாங்கள் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய்”, என்று அ.தி.மு.க. அரசின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்ட மேடையில் வெளிப்படையாகத் தெரிவித்து, பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
மக்கள் எனக்கு குல்லா போட விரும்புகிறார்கள்” -நிஜமா கமல் சொன்னதுதாங்க…!அறம் தவறிய அர்னாப் – வைரலாகும் #ArnabDidIt…!
ஒரு முதல்வரின் உடல்நிலை குறித்து, அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்று வந்தபோது அது பற்றிய முழு விவரத்தையும் வெளியிடுமாறும், மக்களின் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் புகைப்படத்தை வெளியிடுமாறும் தலைவர் கலைஞர் அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுங்கட்சியினர் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால், இப்போது அவர்களே புகைப்படம் மட்டுமல்ல, அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெறுகின்ற வீடியோவையே வெளியிடவேண்டும் என்று தங்கள் உள்கட்சி அரசியலை பொதுவெளி யுத்தமாக மாற்றியிருக்கிறார்கள்.“சிகிச்சை பெற்று வந்த காலத்தில் ஜெயலலிதா அம்மையாரை மாண்புமிகு ஆளுநர் உள்பட யாருமே பார்க்கவில்லை”, என்றும், “அம்மையார் இட்லி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாமே பொய்”, என்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பதவியேற்பு உறுதிமொழியேற்ற அமைச்சரே கூறுகிறார் என்கிறபோது, இந்த அரசு எந்த அளவுக்கு மக்களை ஏமாற்றியிருக்கிறது என்பதை உணர முடிகிறது. ‘அரசியல் சட்டத்தின்படி உண்மையாக நடந்துகொள்வேன்’, என்று உறுதிமொழி ஏற்று அமைச்சரானவர்கள், அந்த உண்மைக்கு மாறாக பச்சைப் பொய்யை அவிழ்த்துவிட்டு மக்களை திசைதிருப்பி இருக்கிறார்கள்.

அவர் உடல்நிலை பற்றி, திசைதிருப்பும் கூட்டுச்சதியில் அமைச்சர்கள் மட்டுமல்ல, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அம்மையார் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, ‘முதலமைச்சரின் இலாகாக்களை பெற்றுக் கொண்ட திரு ஓ.பன்னீர்செல்வமும் ஈடுபட்டிருக்கிறார்’, என்பது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்குமூலத்தின் மூலம் தெரிய வருகிறது. அம்மையார் ஜெயலலிதா, தன் இலாகாக்களை திரு ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்குமாறு 11.10.2016 அன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்குக் கொடுத்த அறிவுரை எப்படி பெறப்பட்டது? என்ற மிக முக்கியமான கேள்வி எழுந்திருக்கிறது.

யாரும் பார்க்க முடியாத நிலையில் மருத்துவமனையில் இருந்த செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தமிழகம் – புதுவை ஆகிய மாநிலங்களின் 4 தொகுதி இடைத்தேர்தல்களில் தனது கட்சியின் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் படிவத்தில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்திருக்கிறார். அவரை நேரில் சந்திக்கவே இல்லை என்றால் எப்படி இந்த கைரேகை பெறப்பட்டது? என்ற பலத்த சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து, ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.கழக வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடர்ந்துள்ள வழக்கு உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.

அதுபோலவே, இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்து ஜெயலலிதா அம்மையார் பெயரில் வெளியான அறிக்கையில் அவரது கையெழுத்தும் இடம்பெற்றிருந்தது. வேட்புமனுவில் கையெழுத்து போட முடியாத நிலையில் கைரேகை மட்டுமே வைத்தவர், அறிக்கையில் கையெழுத்திட்டது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையிலேயே இது அவர் கையெழுத்துதானா, அவரது உடல்நிலையைக் காரணமாக வைத்து வேறு யாரேனும் கையெழுத்து போட்டார்களா? தமிழகத்தின் முதல்வருடைய கையெழுத்தையே போலியாகப் போடக்கூடியவர்கள் அவரைச் சுற்றி இருந்திருக்கிறார்களா?

அப்போது ஒட்டுமொத்த தமிழக அரசே அப்பல்லோ மருத்துவமனையில் முகாமிட்டு இருந்ததே? முதலமைச்சர் பொறுப்பிலிருந்த திரு ஓ.பன்னீர்செல்வமும், இப்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி திரு. பழனிசாமி போன்றோரும் எப்படி இந்தக் கொடுமையை வேடிக்கைப் பார்த்தார்கள்? அம்மையார் ஜெயலலிதா இறந்தபிறகு இருவருமே முதலமைச்சர் பதவிக்கு வந்தார்கள். 6.12.2016 முதல் 6.2.2017 ராஜினாமா செய்யும் வரை முதல்வராக இருந்த திரு ஓ.பன்னீர்செல்வம் ஏன் இந்த மர்மத்தை மறைத்தார்?

அதன்பிறகு, 16.2.2017 முதல் இன்றுவரை முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி திரு. பழனிசாமி ஏன் இன்னும் இந்த மர்மங்களை மறைத்துக் கொண்டிருக்கிறார்? இப்போது இருவரும் இணைந்தே ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக் கமிஷனுக்கு நீதிபதியை நியமிக்காமல் முட்டுக்கட்டை போடுவது ஏன்?. விசாரணைத் துவங்கினால் அப்பல்லோ மருத்துமனையில் முகாமிட்டு, ஜெயலலிதாவை சுற்றியிருந்தவர்களுக்கு துணைபோன திரு. பன்னீர்செல்வமும், திரு. எடப்பாடி பழனிசாமியும் சிக்கிக் கொள்ள நேரிடும் என்ற அச்சம்தானே காரணம்?

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் மரணமடைந்த வரை உள்ள மர்மங்களை இனிமேலும் மறைப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். இதற்கான தர்மயுத்தம் நடத்துவதாகச் சொல்லி மக்களை ஏமாற்றிய திரு ஓ.பன்னீர்செல்வம் இப்போது பதவி கிடைத்ததும் மவுனம் காப்பது பச்சைத் துரோகம்.

“மாண்புமிகு ஆளுநர் அவர்களும் மருத்துவமனையில் முன்னாள் முதல்வரை சந்திக்கவில்லை”, என்ற பகீர் தகவலை அமைச்சர் கூறுவதால், இந்த அரசு அமைக்கும் விசாரணைக் கமிஷன் மூலம் மரணத்தில் உள்ள மர்மங்கள் நிச்சயம் வெளிவராது. அதுமட்டுமின்றி, விசாரணைக் கமிஷன் அமைக்கிறோம் என்று அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த மர்மத்தை மறைக்க இணைந்தே செயல்படுகிறார்கள் என்பது அரசு பணத்தில் விழா நடத்துவதிலும், கோட்டையில் தேசிய கொடியேற்றும் உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை மாநிலத்திற்கு பெற்றுக் கொடுத்த தி.மு.க.வின் வரலாறு கூட தெரியாமல், திடீரென்று ஞானோதயம் வந்தவர்களாக பேசுவதிலிருந்தும் தெரிகிறது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாகப் பேசியதை மறைக்க தி.மு.க மீது விமர்சனங்களைத் தொடுத்துள்ளார்கள். அதை தி.மு.க. எதிர்கொள்ளும் என்று கூறும் அதேநேரத்தில், மணல் ஊழலிலும் – பண மதிப்பிழப்பு நடவடிக்கையிலும் “குடும்பத்தை”யே ஆதிக்கம் செய்யவைத்து சிக்கிக் கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும், திரு ஓ.பன்னீர்செல்வமும் தி.மு.க. பற்றி பேசுவது, “சாத்தான் வேதம் ஓதும்” கதையே என்பதும் புரிகிறது

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை திசை திருப்ப திரு பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் நேற்றிலிருந்து தவியாய் தவிப்பதையும் உணர முடிகிறது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டாக்டர்கள் குழு வந்து பரிசோதித்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா அவர்கள், ‘முதலமைச்சரின் உடல்நிலையை கூர்ந்து கவனித்து வருவதாக’, அறிவித்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மையார் அவர்களின் சிகிச்சைக்கு மத்திய அரசும் உதவியிருக்கிறது என்றநிலையில், அவர் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை வெளிக்கொணர வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆகவே தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*