’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ரவிக்குமார் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் “ஈழப் பிரச்சனை குறித்து அக்கறையுள்ளோர் அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரை” என்ற வரிகளுடன் தி இந்துவில் ஒரு முழுப் பக்க அளவில் வெளிவந்துள்ள Chronicles of a carnage foretold என்ற நேர்காணல் கட்டுரையை பகிர்ந்திருந்தார். சமீபத்தில் ஐநா மனித உரிமைகள் சபையின் கூட்டம் ஜெனிவாவில் நிறைவடைந்த நிலையில் திரு. ரவிக்குமார் இந்தக் கட்டுரையை பரிந்துரைத்ததால் கட்டுரையை படிக்கும் ஆர்வம் மேலிட்டது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த முறிந்த பனை (The Broken Palmyra – The Tamil Crisis in Sri Lanka, An Inside Account) என்ற புத்தகத்தையும் அதை எழுதியவர்களையும் பற்றியதானது இந்த கட்டுரை.
முறிந்த பனை (Broken Palmyra ) 80களின் இறுதியில் தொகுக்கப்பட்ட முக்கியமான நூல். குறிப்பாக ஈழத்தில் ஆயுத போராட்டம் துவங்கிய ஆரம்பகால கட்டம் துவங்கி இந்திய அமைதிப்படை சென்று திரும்பிய காலம் வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு தான் இந்த நூல்.
1980களின் இறுதியில் யாழ்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்களாக இருந்த ராஜன் ஊலே, தயா சோமசுந்தரம், கோபாலசிங்கம் ஸ்ரீதரன் மற்றும் ரஜனி திரணகம ஆகியோரால் தொகுக்கப்பட்டு மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்பு UTHR(J) வாயிலாக வெளியிடப்பட்டது தான் முறிந்தபனை நூல்.
இந்த குழுவில் முக்கியமானவர் ரஜனி. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பேராரிசியராக இருந்தார். சில காலம் விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார். அன்றைய காலகட்டத்தில் பல்வேறு ஈழ ஆயுத போராட்டக் குழுக்களிடையே இருந்த மோதல் போக்கை பார்த்து விடுதலை புலிகளின் இயக்க தொடர்பை ஒரு கட்டத்தில் நிறுத்திக் கொள்கிறார். அந்த சமயத்தில் இந்திய அமைதிப் படை ஈழத்தில் நுழைகிறது. இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து வெளியேறுவதற்கு சில மாதங்கள் முன்னால் ரஜனி கொல்லப்படுகிறார்.
ஏனைய மூன்று பேராசியர்களும் தங்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தலைமறைவாகி பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.
2009 ஈழ இனப்படுகொலைக்கு பின்னர், வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்திருந்த ஈழத் தமிழர் பலரும் குறிப்பாக விடுதலைப் புலிகளை எதிர்த்தவர்கள் மீண்டும் யாழ்பாணதிற்கு திரும்பும் சூழ்நிலையில் வெளிநாடுகளில் இருந்த ராஜன், தயா, ஸ்ரீதரன் ஆகிய பேராசிரியர்களும் நாடு திரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு யாழ்பாண பல்கலையில் போதுமான வரவேற்பு இல்லை. இதை அவர்கள் விமர்சிக்கும் போது யாழ்ப்பாண பல்கலையில் இருப்பவர்கள் இன்னமும் அதே பழைய குறுகிய தமிழ் தேசிய சிந்தனையில் இருந்து விடுபடவில்லை என்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் தான் தி இந்துவில் முறிந்த பனை புத்தகத்தை தொகுத்த இந்த முன்னாள் பேராசிரியர்களின் விரிவான நேர்காணல் மிகுந்த முக்கியத்துவம் பெற்று வெளிவந்துள்ளது. 2009ல் ஈழத்தில் லட்சணக்கானவர்கள் கொல்லப்பட்ட போதோ அல்லது இலங்கை அரசால் வெள்ளைவான்கள் மூலம் ஆட்கள் கடத்தப்பட்ட போதோ இலங்கையில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக்குட்படுத்தப்பட்ட போதோ தி இந்துவில் இவ்வளவு விரிவான கட்டுரைகளோ நேர்காணல்களோ வருவதில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது.
அதே வேளையில் முறிந்த பனை என்ற புத்தகம் ஆரம்ப கால ஈழ விடுதலை ஆயுத போராட்டகாலத்திய வரலாற்றில் முக்கியமான புத்தகம் என்பதை மறுக்க முடியாது. முறிந்த பனை என்ற இந்த தொகுப்பு இலங்கை ராணுவம், அன்றைய சமயத்தில் இருந்த பல்வேறு ஆயுத போராட்ட குழுக்கள் மற்றும் இந்திய அமைதிப் படை ஆகியவற்றின் தாக்குதல்கள் குறிப்பாக பொது மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.
இதில் கவனிக்க வேண்டியது இலங்கை ராணுவமும் இந்திய அமைதிப்படையும் இரு தேசகளின் பிரதான அரசுப்படைகள். இந்த படைகளும் இரண்டு சனநாயக அரசை பிரதிநிதிப்படுத்துபவர்கள். இவர்கள் ஏனைய ஆயுதக் குழுக்கள் போல மக்கள் மீது வன்முறையை ஏவுவது அரச பயங்கரவாதம் என்று சொல்லப்படும். அந்த உணர்வு ஏதுமின்றி இலங்கை ராணுவமும் இந்திய அமைதிப் படையும் 1987-89 கால கட்டத்தில் பொது மக்கள் மீது நடத்திய வன்முறைகளை ஆவணப்படுத்தி உள்ளது இந்த நூல். இந்த நூலில் உள்ள தகவல்களை அடிப்படையாக வைத்து இந்திய அமைதிப் படை இலங்கை ராணுவம் ஆகியவற்றின் மீது மனித உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் வரலாறு வேறு விதமாக திசை மாறியிருக்கும்.
அதே சமயம் அன்றைய. காலகட்டத்தில் பல்வேறு ஆயுத குழுக்கள் இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு பொது மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள், போட்டி ஆயுத குழுக்கள் இடையே நடைபெற்ற சண்டைகளில் உயிர் துறந்தோர் பற்றிய தகவல்கள் ஆகியவையும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முறிந்த பனை புத்தகம் பற்றிய விவாதம் வரும் போதெல்லாம் இப்புத்தகத் தொகுப்பாளர்களில் ஒருவரான ரஜனியின் படுகொலையில் இருந்து தான் அது தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் ஆயுத குழுக்களில் ஒன்றாக இருந்த விடுதலை புலிகள் தான் ரஜனியை கொன்றார்கள் என்று ஆரம்பித்து பல ஆயுத போராட்டக் குழுக்களில் ஒன்றான விடுதலை புலிகள் தான் எல்லா வன்முறைகளையும் செய்தார்கள் என்று முடிப்பார்கள்.
ரஜனியை யார் கொன்றார்கள் என்பது இப்போது வரை மர்மமான புதிர் தான். ரஜனியின் இருப்பு யாருக்கு அதிக அச்சுறுத்தல் என்று பார்த்தால் ரஜனியை யார் கொன்றிருப்பார்கள் அல்லது கொல்ல துண்டியிருப்பார்கள் என்பதற்கான விடை கிடைக்கும்.
முறிந்த பனை புத்தகம் இலங்கை அரசு, இந்திய அரசு ஆயுத போராட்ட குழுக்கள் என அனைத்து தரப்பையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது. இதில் விடுதலை புலிகள் உள்ளிட்ட ஆயுத போராட்ட குழுக்களுக்கு மனித உரிமை அமைப்புகளின் அங்கீகாரங்கள் தேவையில்லை. ஏனென்றால் அவை அன்றைய நிலையில் ஈழ மக்களைத் தவிர வேறு யாருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் கிடையாது. ஆனால் இலங்கை அரசும் இந்திய அரசும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதனால் ரஜனி இந்திய அமைதிப் படையாலோ அல்லது அவர்களின் ஏவல் குழுக்களாலோ கொல்லப்படிருக்கலாம் இல்லையென்றால் இலங்கையின் உளவு பிரிவினரால் கொல்லப்படிருக்க வேண்டும். ப‌ல ஆண்டுகளாக ஈழ விடுதலைப் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் நோக்கர்கள் ரஜனி கொலை செய்ததது இந்திய அமைதிப் படைகளுக்கு ஆதரவாக அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்த ஆயுத குழுக்களில் ஒன்றாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கருதுகிறார்கள். ரஜனி கொலை நடந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணம் இந்திய அமைதிப் படையின் கட்டுப்பாட்டில் இருந்தது கவனிக்கப்பட வேண்டியது. சர்வதேச மனித உரிமை விசயங்களை பொறுத்தவரை அன்றைய நிலையில் விடுதலைப் புலிகளை விட அரசுகளுக்கே அதிக அழுத்தம் இருந்தது. அதன் பொருட்டு ரஜனி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐயமே மேலிடுகிறது. குறிப்பாக ர‌ஜனியின் கொலை குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்பது இந்த நிகழ்வில்  முக்கியமானது. விசாராணை ஏதும் இல்லாமல் புலிகள் தான் செய்தார்கள் என்ற பிரச்சாரம் செய்யப்பட்டது ரஜனி கொலை குறித்த சந்தேகங்களை வலுப்படுத்துகிறது. இன்று வரை ரஜனி கொலை விசாரணை ஏதும் இல்லை வெறும் பிரச்சாரம் மட்டுமே நடக்கிறது என்பதை மேலும் உறுதி செய்கிறது இந்த நேர்காணல்.
இந்த கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கான விடைகள் ஆராயப்பட்டதா என்பது கேள்விக்குறி தான். இத்தனை தொழிற்நுட்பம் முன்னேறி சமூக ஊடகங்கள் பலம் வாய்ந்த இந்த காலத்திலேயே ஒரு மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி விட்டு அதை மறைத்து விடுதலைப் புலிகளை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் வேலைகள் நடக்கும் போது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவங்களை திரித்து கூற எவ்வளவு எளிதாக இருக்கும்.
திடீரென்று முறிந்த பனை புத்தகமும் அதன் குறித்த விவாதமும் மீண்டும் துவக்கப்பட்டிருப்பது சந்தேகங்களை எழுப்பினாலும் சில கேள்விகளுக்கான பதிலை முப்பதாண்டுகள் கழித்து தருகிறது.
மேலும் எல்லாவற்றுக்கும் விடுதலை புலிகள் தான் காரணம் என்ற தொனி நேர்காணல் முழுக்க தெரிகிறது. 2009 ஈழ இனப்படுகொலைக்கும் விடுதலைப்புலிகளை மட்டும் குற்றவாளிகளாக்கும் செய்கை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தொடர்கிறது என்பதை கோடிட்டு காட்டுகிறது.
90 களுக்கு பிறகு அதாவது ரஜனி கொலை செய்யப்பட்ட பிறகு நூலை தொகுத்த பேராசிரியர்கள் இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர்கிறார்கள்.இந்த பேராசிரியர்கள் தொகுத்த புத்தகம் எந்த நாட்டின் ராணுவம் மனித உரிமை மீறல்களை செய்தது என்று கூறியதோ அதே நாட்டில் பல ஆண்டு காலம் தஞ்சமடைகிறார்கள். அப்படி பார்த்தால் முறிந்த பனை புத்தகமே விடுதலை புலிகளை மட்டும் வரலாறு எங்கும் பிரதான குற்றவாளியாக காட்ட செய்யப்பட்ட முயற்சியா என்ற கேள்வி வருகிறது.
2009 ஈழ இனப்படுகொலைகுப் பிறகு குறிப்பாக இந்திய துணை தூதரகம் யாழ்ப்பாணத்தில் துவங்கப்பட்டப் பிறகு ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த வரலாறை திருத்தி எழுதும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக இதை காணலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சர்கள். 2009 ஈழ இனப்படுகொலைக்கு சர்வ தேச விசாராணை கோரி பல்வேறு நடவடிக்கைகளை  தமிழ்  சமூகம் எடுத்து வரும் சூழ்நிலையில் இது போன்ற முப்பது ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வுகளுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என்பதை கேள்விக்குட்படுத்த வேண்டும்.
முக்கிய செய்திகள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*