பிறந்தநாள் வாழ்த்துக்கள் ‘வைகை புயல்’

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பது உண்மை எனில் அவர் நல்ல மருத்துவரும் கூட, முன்பு போல் தொடர்ந்து அவரது படங்கள் வருவதில்லை என்றாலும் பல தொலைக்காட்சி சேனல்களில் அவரது காமெடி ஔிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கவுண்டமணி-செந்தில் காமெடிகளில் துணை கதாப்பாத்திரமாக நடித்துக் கொண்டிருந்தார். 1994-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘காதலன்’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு வடிவேலு இல்லாமல் படங்கள் வெளியாவது குறைவு என்ற நிலை ஏற்பட்டது. நகைச்சுவையான வசனங்களை எழுதி ரசித்து சிரிக்க வைக்கும் முகபாவனைகளின் மூலம் அதை பேசி நடிப்பது இவரது ஸ்டைல். நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமது, சிறந்த பாடகராகவும் திகழ்ந்தார். ‘எட்டனா இருந்தா எட்டூரு எம்பாட்ட கேட்கும்’, ‘வாடி பொட்டப்புள்ள வெளிய’ போன்ற பாடல்கள் இவரது குரலில் பட்டிதொட்டி எல்லாம் ஒலித்தது.
மதுரையில் பிறந்தவர் என்பதாலும் புயல் வேகத்தில் நகைச்சுவை வசனங்களை பேசுவதாலும் அவர் ‘வைகை புயல்’ என செல்லமாக அழைக்கப்பட்டார். இவரது காமெடி உணர்வை பார்த்து பழம்பெரும் காமெடி நடிகர் நாகேஷ் பெயரை சேர்த்து ‘கருப்பு நாகேஷ்’ என்றும் பலர் கூறுவதுண்டு. இவரது காமெடிக்காக மட்டுமே ஓடிய படங்கள் பல உண்டு. ‘வின்னர்’ அதில் மிக முக்கியமான திரைப்படம், வடிவேலுவின் காமெடியை நீங்கினால் அதில் முக்கால்வாசி படமே இல்லாமல் போகும் அளவுக்கு அதில் அதிகமான காட்சிகள் அவருக்கு வழங்கப்பட்டது. ப்ரண்ட்ஸ், வெற்றி கொடி கட்டு போன்ற படங்களும் மிகவும் பிரபலம், கவுண்டமணி-செந்தில் கூட்டணிக்கு பிறகு வடிவேலு-பார்த்திபன் கூட்டணி வெகுவான ரசிகர்களை கவர்ந்தது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
வடிவேலு தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கத்தின் பெயரில் படமே எடுத்து விட்டார்கள். இணையதளவாசிகள் அவரது வசனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதில் சில பின் வருமாறு
‘பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு’
‘சண்டைக்கு வரியா மண்ட பத்திரம்’
‘ஓனர்னா ஓரமா போ’
‘நீ புடுங்குறது பூராமே தேவையில்லாத ஆணிதான்’
‘கடல்லயே இல்லையாம்’
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வடிவேலு அடிக்கடி பயன்படுத்தும் ‘ஆஹா’ என்ற வார்த்தையை பெண்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள். சமூக வலைதளங்களில் அவரது முகபாவனைகளை பயன்டுத்தி பல மீம்கள் உலா வருகின்றன.
இம்சை நீக்கிய புலிக்கேசி
காமெடியனாக மட்டுமே நாம் ரசித்து வந்த வடிவேலு, கதாநாயகனாக அறிமுகமாகியது  ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. அதேபோல் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவரது சக நடிகரான கோவை சரளாவுடன் இணைந்து ‘மெர்சல்’ படத்தில் நடித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவான படங்களில் காமெடிக்கு பஞ்சமிருக்காது. நீண்ட காலமாக நம்மை சிரித்து மகிழ வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கலைஞனுக்கு இன்று 57-ஆவது பிறந்தநாள், வாழ்த்துக்கள் வடிேவேலு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*