விழித்திரு: மிகத்தைரியமான அரசியல் த்ரில்லர் – சா.ஜெ.முகில் தங்கம்

கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்: இந்து மஹாசபை..!

குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா..!

’ஜெ’மரணம் :விசாரணை தாமதம் ஏன்?

சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாவதற்கு கடுமையான போராட்டங்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டியிருப்பதை சமீபகாலங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது. திரையரங்குகளைப் பிடிப்பதில் இருந்து டிக்கெட் விலையேற்றம் வரை எல்லாமே இதுபோன்ற நட்சத்திர அந்தஸ்து இல்லாத படங்களுக்கு சவால்களாக இருக்கின்றன.தான் எடுத்துக்கொண்ட கதையை எந்தவித சிதைவும் இல்லாமல் சொல்லவேண்டும் என்றால் இயக்குநர்களே தயாரிப்பாளராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இயக்குநராக இருந்த மீரா கதிரவன் தயாரித்து இயக்கியிருக்கும் படம்தான் விழித்திரு. கடைசி நேரம்வரை வெளியாகுமா ஆகாதா? என்ற கேள்விக்குறியுடனேயே விழித்திரு வெளியாகியுள்ளது.

வியாபரத்திற்காக மட்டுமே என்றிருக்கும் கமர்ஷியல் கதைக்களத்தினை தன்னால் முயன்ற வரை மக்களுக்கான கதைக்களமாக மாற்றியுள்ளார் மீரா கதிரவன். மிக முக்கியமான அரசியல் பிரச்சனையை சொல்லப்போனால் நம் சமூகத்தில் யாரும் பேசத்தயங்குகிற அல்லது மூடி மறைத்துப் பேசக்கூடிய விசயத்தை கையில் எடுத்து கதையாக்கி திரைக்கதை அமைத்திருக்கிறார். அந்த கதையுடன் மேலும் மூன்று கதைகளையும் அது சார்ந்த மாந்தர்களையும் நம்மிடையே அறிமுகப்படுத்தி கடைசியில் அவர்கள் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைக்கிறார். இந்த திரைக்கதை உத்தி கொஞ்சம் பிசகினாலும் காலை வாரிவிடக்கூடியது. அதனை மிகத்திறமையாகவே கையாண்டுள்ளார். சில இடங்களில் சலிப்ப்படைந்தாலும் படம் நெடுக விறுவிறுப்பு குறையவில்லை.

 

 

 

 

 

 

 

 

வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டு தாமதமாகும் திரைப்படங்கள் பலவற்றில் இருக்கும் பெரிய குறை அதன் காலம். ஏறக்குறைய தற்போதைய நிகழ்காலத்தைவிட பின்தங்கியிருப்பதாக தோன்றிக்கொண்டே இருக்கும். அவர் எடுத்துக்கொண்ட கதை இன்றளவும் நம்மிடையே உயிர்ப்புடன் இருப்பதால் விழித்திருவின் ஒரு இடத்தில்கூட பழைய படம் என்ற எண்ணம் தோன்றவில்லை. அதுவே மிகப்பெரிய பலம்.

ஒரே இரவில் நடக்கக்கூடிய நான்கு கதைகள்தான் விழித்திரு. சம்மந்தமில்லாத நான்கு கதைகள் சந்தித்துக்கொள்ளும் இடம் என்னவாக இருக்கும்? அந்த நான்கு கதைகள் என்னென்ன? என்பதை நான் சொல்லப்போவதில்லை. நான்கு கதைகளின் மாந்தர்களுக்குள்ளும் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்று சேரும் புள்ளி மனிதம். மனிதம்தான் எப்படியான மனிதர்களையும் இணைக்கக்கூடியது என கதையின் ஓட்டத்திலேயே இயல்பாய் சொல்லிப்போகிறார் இயக்குநர்.

முத்துக்குமார், திலீபன், என கதையின் கதாபாத்திரங்களின் பெயர்கள் கூட அரசியல் பேசுகின்றன. இந்த இரு பெயர்களையும் மையக்கதாபாத்திரங்களுக்கு வைத்து மறைந்த இருவரையும் நினைவுபடுத்திய இயக்குநருக்கு நன்றிகள். படம் நெடுக முத்துக்குமார் வைத்திருக்கும் தோள்பையின் மூலம் ஒரு வலுவான அரசியல் சம்பவத்தை நமக்கு கடத்துகிறார். தான் எடுத்துக்கொண்ட பிரச்சனையை வெளிப்படையான வசனங்கள் மூலம் வெளிப்படுத்திய தைரியம் பாராட்டுக்குரியது. முத்துக்குமாரின் கதாபாத்திரம் உங்களுக்கு ராம்குமாரை நினைவுபடுத்தலாம். படம் முழுக்க அவனது தங்கையிடம் பேசும்பொழுது நிஜத்தில் ராம்குமாருக்கும் ஒரு தங்கை இருந்தது நினைவுக்கு வரலாம். இப்படி படம் பேசிய விசயங்கள் சமகாலத்தை பிரதிபலித்துக்கொண்டே இருக்கின்றன.

“நாம் ஒருவருக்கு நன்மையோ தீமையோ செய்யாத வரையில் மட்டுமே அவர் நமக்கு அந்நியமானவர். இரண்டில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் அவர் நம் வாழ்வின் அங்கமாகி விடுகிறார்”.

படத்தின் ஆரம்பத்திலும் கடைசியிலும் வரும் இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பதை திரைக்கதையின் வழியே சொல்லியிருக்கிறார் மீரா கதிரவன். நாம் தெரியாமல் செய்யும் நல்லதுக்கு எவ்வளவு வலிமை இருக்கும் என்பதை வெங்கட்பிரபுவின் கதாபாத்திரத்தின் மூலம் சொல்லியிருப்பது அழகு. பட்த்தில் இதுபோன்ற தருணங்கள் நிறைய இருக்கின்றன. டப்பிங் கலைஞராக வரும் வெங்கட் பிரபுவுக்கும் அவரது மகளுக்குமான பாடல், அந்த நாய்க்குட்டி, ஈழத்தமிழ் பேசும் ஜெய்பாலன் தாத்தா, பிச்சையெடுக்கும் பணக்காரன், கடைசி காட்சியில் முத்துக்குமாரின் வெள்ளந்தி தங்கை பேசும் நெல்லைத் தமிழ் நம் கண்களிலும் கண்ணீரை வரவைக்கலாம்.

 

 

 

 

 

 

 

 

கிருஷ்ணா, வெங்கட் பிரபு, விதார்த், தன்ஷிகா என எல்லோரும் கதைக்கு தேவையானதை கொடுத்துள்ளனர். படத்தின் பிண்ணனி இசை பல இடங்களில் காட்சிகளின் உணர்வை சிதைத்த்து என்றுதான் சொல்ல வேண்டும். வெவ்வேறு கதைகளை சுவாரசியப்படுத்தியதில் படத்தொகுப்பு அருமை. படம் முழுக்க இரவிலேயே நடப்பதால் இரவுக்கு செய்திருக்கும் லைட்டிங் அருமை. சென்னையின் இருளை நிறம் மாறாமல் ஒளியமைத்து படம்பிடித்துள்ளனர். சில இடங்களில் ஒளிப்பதிவு தடுமாறியதைப் போன்ற உணர்வு. மொத்தத்தில் தொழில்நுட்பரீதியில் சில குறைகள் இருந்தாலும் கதையின் ஓட்டம் அதைப் பொருட்படுத்தவில்லை. அதுபோன்று நான்கு கதைகளில் விக்ரம் – கிறிஸ்டினாவின் கதையின் நீளம் தேவைதானா? டி.ஆரின் பாடலை கொஞ்சமும் யோசிக்காமல் தூக்கியிருக்கலாம்.

கடந்த சில வருடங்களாக தமிழக அரசியல் தளத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களையும் விழித்திரு நியாபகப்படுத்துகிறது. வெறும் செய்தித்தாள்களில் மட்டும் பார்த்து கடந்துவிட்ட நமக்கு அந்த சம்பவங்களுக்கு முன்னும் பின்னும் நடந்தவை இவைதானோ என்ற கேள்வியை இப்படத்தின் மூலம் நம்முள் எழுப்புகிறார் இயக்குநர். அதிகார வர்க்கங்கள் அனைத்தும் ஒன்றுகூடி செய்யும் கொலைகள் எல்லாவற்றிற்கும் பின்னால் இருக்கும் உண்மைகள் எளிதில் வெளிவருவதில்லை என்பதை விழித்திரு அழுத்தமாகவே சொல்கிறது. கொலை செய்யப்படுபவர்களின் பின்னால் இருக்கும் உண்மைகள் வெளிவராத வரை அவர்கள் அதிகாரத்திற்கு இரையான அப்பாவிகள் என்று ஒருபோதும் தெரியப்போவதில்லை. அதைத்தான் முத்துக்குமார் சொல்கிறான். சமகால சமூக அரசியல் பிரச்சனையை தெளிவான அரசியல் பார்வையோடு படமாக்கியதில் விழித்திரு முக்கியமான சினிமா.

-சா.ஜெ.முகில் தங்கம்

பன்னீரின் எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழா ரத்து…!

இனி கொச்சின் தேவசம் போர்டும் தலித் குருக்களை நியமிக்கும்!

வீடு திரும்பினார் நடராஜன்:எடப்பாடிக்கு நன்றி சொன்னாரா உண்மை என்ன?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*