மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி…!

ஊரகப் பகுதிகளில் உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டது. அதன் பேரில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தமிழகத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளை, மாநில நெடுஞ்சாலைகளாக மாநில அரசுகள் மாற்றிக் கொள்ளலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின்  உத்தரவை சுட்டிக் காட்டி தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட்  உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்  பொது நல வழக்கு தொடரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடை திறக்க சுப்ரீம் கோர்ட்  தடை விதித்துள்ள நிலையில், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்படுவதாகவும், மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றி புதிய டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு திறந்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்  உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேசிய மாநில சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்  தடை விதித்தது. இதனையடுத்து, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு ஐகோர்ட்  விதித்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. எழுத்துப்பூர்வமான தீர்ப்பு ஒரிரு நாளில் வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் சுமார் 1000 கடைகள் புதிதாக திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*