’பத்மாவதி’ படத்திற்கு உ,பி அரசு எதிர்ப்பு..!

ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘பத்மாவதி’ என்ற பெயரில் இந்தி படம் தயாராகி உள்ளது. படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
படம் வெளியாகும் நாளன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்து உள்ளனர். படத்தை தடைசெய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
பத்மாவதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ராஜஸ்தான் கோதா நகரில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. அந்த தியேட்டரின் முன்னால் ‘ராஜ்பத்கானி சேனா’ அமைப்பை சேர்ந்தவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தியேட்டர் மீது கற்களை வீசினார்கள். டிக்கெட் கவுண்டர்களும் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.இதனால் டிரெய்லர் வெளியீட்டு விழா பாதியில் நிறுத்தப்பட்டது. போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினார்கள். பத்மாவதி படத்துக்கு எதிராக போராட்டம் வலுத்து வருவதால், அப்படம் திரையிடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், பத்மாவதி படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று உத்தர பிரதேச மாநில அரசு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. உத்தர பிரதேச அரசின் உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள இந்த கடிதத்தில், படத்துக்கு சான்றிதழ் அளிக்கும் முன் பொதுமக்களின் கருத்தையும், படம் குறித்து எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் படம் வெளியானால், பெறும் பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*