தீரன் அதிகாரம் ஒன்று: அரிதினும் அரிதான கிரைம் திரில்லர்

இந்துத்துவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ‘பத்மாவதி’ படத்தை?

பாஜக ரெய்டை கலாய்க்கும் விஷால் (#video)

ஷாருக்கானை வழியனுப்பும் மம்தா (#வைரல்_வீடியோ)

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகியிருக்கும் நல்ல கிரைம் த்ரில்லர் கதை என்று ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தை சொல்லலாம். 1995 முதல் 2005 ஆண்டு வரை தமிழகத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தீரன் திருமாறன் என்ற அதிகாரியின் வாழ்க்கை ஒரு கொள்ளை கும்பலால் எப்படி திசை மாறுகிறது என்பதே இதன் கதையாகும்.

குற்றவாளி பற்றிய தகவல்கள் டிஜிட்டல்மயமாகும் முன்பு காவல்துறையினர் அவர்களை பிடிக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என இந்த படம் உணர்த்துகிறது. படத்தை பார்த்துவிட்டு வெளியேறும் அனைவருக்கும் ஒருவித பய உணர்வு தொற்றிக்கொள்ளும். உங்கள் வீடு தேடி வியாபாரம் செய்ய வருபவர்களை கண்டால் பயமாக இருக்கலாம். வில்லன்கள் அவ்வளவு மோசமானவர்களாக இருக்கிறார்கள், கதாபாத்திர தேர்வு மிகவும் அருமை. ஆங்கிலேய அரசாங்கத்தால் குற்றம்பரம்பரை என அறிவிக்கப்பட்ட சாதிகளில் முன்னேற முடியாமல் சிலர் இன்னும் கொலை, கொள்ளை போன்றவற்றையே தொழிலாக செய்து வருகின்றனர். இதுபற்றிய புரிதலை இந்த படம் விளக்கமாக எடுத்துரைக்கிறது. இந்தியா முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பவேரியா கொள்ளையர்களை தமிழக காவல்துறையினர் எப்படி கஷ்டப்பட்டு பிடித்தார்கள் என்பதை கமெர்ஷியல் கலந்து சொல்லியிருக்கிறார். துப்பறியும் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் எல்லாம் மிக சுவாரஸ்யமான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ஒவ்வொன்றும் நச், பொதுமக்களுக்கு நடக்கும் பிரச்சனையை எளிதாக எடுத்துக்கொள்ளும் அரசாங்கம், அரசியல்வாதிகளுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் அதே பிரச்சனை ஏற்படும்போது எப்படி விரைவாக செயல்படுகிறது எனவும் தெளிவாக விளக்கியிருக்கிறார். படத்தில் காதல் காட்சிகளை குறைத்திருக்கலாம், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் கார்த்தி இடையேயான காதல் காட்சிகள் படத்தின் வேகத்தை குறைக்கிறது. போஸ் வெங்கட் மற்றும் காவல்துறை அதிகாரிகளாக வரும் அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கார்த்தி, தீரன் கதாபாத்திரத்துக்கு தேவையானதை சரியாக செய்திருக்கிறார்.

ஜிப்ரானின் இசை படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ், அதேபோல் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு மிரள வைக்கிறது. இவர்கள் இருவரின் கூட்டணியில், கொள்ளையர்கள் வரும் ஒவ்வொரு காட்சியும் நமக்கு பயத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. அதற்கு உறுதுணையாக இருக்கிறது சிவநந்தீஸ்வரனின் எடிட்டிங். ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த எச்.வினோத், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இணைந்து விடுவார். இந்த ஆண்டு வெளியான படங்களில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிக முக்கியமான திரைப்படம், நிச்சயமாக திரையரங்குக்கு சென்று பாருங்கள், அப்போதுதான் இசை மற்றும் ஒளிப்பதிவு உங்களை மிரளச் செய்யும் உணர்வை பெற முடியும். படம் முடிந்த உடனே கிளம்பி விடாதீர்கள், உண்மையாக இந்த வழக்கில் பாடுபட்ட காவலர்களுக்கு அரசாங்கம் அளித்த மரியாதையை பற்றி சில தகவல்கள் கூறப்படும். இப்படி ஒரு படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*