சாதி ஒழிப்புதான் என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கான நீதி :கவுசல்யா சங்கர்..!

மாமல்லபுரத்தில் ஆளுநர் ஆய்வு..!

ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனனுக்கு எதிர்ப்பு: அதிமுக கூட்டம் முடிந்தது…!

உடுமை கவுசல்யாவும் மெரினா ஜூலியும்

“தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா?” அன்பு செழியனுக்காக கொதிக்கும் சீமான்..!

மருத்துவ சோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்கிறார் விஜயகாந்த்..!

“நான் கட்டாயப்படுத்தப்பட வில்லை:கணவருடன் வாழ விரும்புகிறேன்”- ஹாதியா..!

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!

காதலனின் திடலில்…
அனைவருக்கும் அன்பு வணக்கம்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதைப் பெருமிதமாக உணர்கிறேன். ஒருவித நெகிழ்ச்சி என்னை ஆட்கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் இது பெரியார் திடல். பெரியார் வாழ்ந்த, இயங்கிய, உலவியமண்! சங்கருக்கான நீதிக்காகப் பயணிக்கத் தொடங்கிய போது இருந்த கெளசல்யா, சங்கரின் நீதிக்காக நின்றவள். இன்று சமூகநீதிக்காக, சாதி ஒழிப்பு எனும் சமத்துவ நீதிக்காக, தமிழர் விடுதலைக்காக நிற்கிறேன். இதற்குக் காரணம் தந்தை பெரியார் மட்டும்தான்.

பெரியாரை செவிவழியாகவும் நூல்வழியாகவும் உள்வாங்கிய போது போராட்ட வாழ்வு என்னை இழுத்துக் கொண்டது. போராட்ட வாழ்வில் தொடர்ந்து உயிர்ப்போடு நிற்க வேண்டுமானால் நான் ஒன்று செய்ய வேண்டியிருக்கிறது. இந்தச் சமூகம் கட்டமைத்திருக்கிற பெண் மீதான சமூக, பண்பாட்டுச் சிறைகளை தயக்கமில்லாமல் உடைத்து வெளிவந்தாக வேண்டும். இந்தப் பாடத்தை எனக்கு கற்றுக்கொடுத்தவர் தந்தை பெரியார் மட்டும்தான். இன்றும் கணவனை இழந்த பாவப்பட்டவளாக என்னைப் பார்க்கிறார்கள். கெளசல்யாவுக்கு வாழ்க்கை தருகிறோம் என்று எவிடென்ஸ் கதிர் அவர்களிடம் சிலர் கேட்டார்களாம். சங்கர் இழப்பால் முடங்கி, அழுது, தற்கொலை முயற்சி செய்த அந்த கெளசல்யா கொல்லப்பட்டுவிட்டாள். இன்று சங்கரின் இறுதி நீதியான சாதி ஒழிப்பிற்குரிய விடுதலைப் பெண்ணாக, மீண்டும் ஒருமுறை பிறந்திருக்கிறேன். அப்படி விடுதலைப் பெண்ணாக என்னைப் பெற்றெடுத்த தந்தை – தந்தை பெரியார்தான். இந்த உணர்வோடுதான் நான் பெரியாரைத் தந்தை என்றழைக்கிறேன். ஆனால் பெரியார் இன்று என் தந்தை மட்டுமல்ல, என் ஆசான், தோழன், நண்பன் ஏன் காதலனும்கூட!

இனி தலைப்பின் கீழ் என் அறிவுக்கெட்டிய சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டில் சாதியமைப்பின் கொடிய விளைவுகள் வெவ்வேறு மாதிரி இருந்துள்ளன; இருக்கின்றன. அது மனிதன் வாயில் மலம் திணிக்கவும் வைத்துள்ளது, ஒரே குடிசைக்குள் தாழ்த்தப்பட்டோரை குழந்தைகள் உட்பட துடிக்கத் துடிக்க எரித்துக் கொலை செய்ய வைத்துள்ளது. ஊராட்சி மன்றத் தேர்தலில் ஒரு தாழ்த்தப்பட்டவர் நிற்கத் துணிந்ததற்காகப் பட்டப்பகலில் தலையைத் துண்டித்துப் படுகொலை செய்யவும் வைத்துள்ளது. இப்படி சொல்லிக் கொண்டு போனால் அது நீண்டு கொண்டே போகும். அதுவும் தாழ்த்தப்பட்ட பெண்கள் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாகி பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது தொடர் நிகழ்வாகிவிட்டன. இவை இன்றும் குறைவின்றி நடைபெற்றே வருகின்றன என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இதில் சாதியின் விளைவாக நடக்கும் கொடூரத்தின் உச்சமாக சாதிய கெளரவக் கொலைகள் நடைபெறுகின்றன.

கொலை என்பதே கொடிய குற்றம்தான். அதுவும் சாதி வெறியால் நடைபெறும் கொலையை சாதியக் கொலை என்று வரையறுக்கலாம். ஆனால் இதுவரை கொலையையும் சாதியின் பேரிலான கொலையையும் இந்தியச் சட்டம் பிரித்துப் பார்த்ததில்லை என்றே புரிந்து கொண்டிருக்கிறேன். எல்லாம் பொத்தாம் பொதுவாகக் கொலை என்றே பார்க்கப்படுகின்றன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்ற ஒரு பிரிவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கென வழங்கப்பட்டுள்ளது.

அது அம்மக்கள் பல்லாண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமையே தவிர யாரும் சலுகையாகத் தந்ததல்ல. இந்தச் சட்டம் சாதியின் பேரால் ஒருவர் மற்றவரை இழிவாகப் பேசினாலோ நடத்தப்பட்டாலோ அவர்கள் மீது பாயும். ஆனால் இங்கே இன்னும் இரட்டை தம்ளர் முறை உள்ளது. தேநீர் கடைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு தம்ளரும் மற்றவர்களுக்கு சிறப்பான தம்ளர் தரும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. இது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி குற்றம் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு நீதிமன்றங்களால் பிணை வழங்க முடியாது. பிணையற்ற சிறைத் தண்டனை என்பது ஆதிக்கம் செய்யும் சாதியினருக்கு மனத்தடையை ஏற்படுத்தும் என நம்புகிறோம். ஆனால் அதையும் மீறி வன்கொடுமைகள் நடந்து வருகிறது என்பதை நான் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அதுவும் இல்லையென்றால் இன்னும் இது காட்டுமிராண்டிச் சமூகமாகவே கருதப்படும் அளவுக்கு சாதிய வன்கொடுமை தாண்டவமாடும்.

இதை இங்கே நான் குறிப்பிடக் காரணம் இருக்கிறது. சாதியின் பேரால் கெளரவக் கொலை எனும் தனிக்குற்றவகை உருவாகியுள்ளது. அதற்குத் தனிச்சட்டம் கேட்டு நாம் போராடுகிறோம்.

எனக்கு நடந்ததையே இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம் எனக் கருதுகிறேன். நானும் சங்கரும் காதலித்தோம். ஒரே கல்லூரியில் படித்த போது காதல்வயப்பட்டோம். அது என் வீட்டாருக்குத் தெரியவந்தது. என் வீட்டார் சாதிப் பிடிப்புக் கொண்டவர்கள். நான் பள்ளியில் படிக்கிற போது என் அப்பா ஒரு குறிப்பிட்ட பெண்ணைச் சுட்டிக்காட்டி அவளோடு நீ சேரக்கூடாது, தண்ணீர் கூட வாங்கிக் குடிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அப்போது எனக்கு அது புரிந்திருக்கவில்லை. ஏனெனில் அவள் தாழ்ந்த சாதியாம். ஆனால் எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். அந்தளவு என் பெற்றோர் சாதி வெறிபிடித்தவர்கள்.

எங்கள் காதல் தெரியவந்த போது கடுமையாக எதிர்த்தார்கள். அதற்கெதிரான சூழ்ச்சிகளைத் தொடங்கினார்கள். எங்களைப் பிரிக்க எல்லா முயற்சியும் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் தாழ்ந்த சாதி என்ற பெயரில் சங்கரை அடியோடு வெறுத்தார்கள். நான் அவனை நெஞ்சில் நிறைத்து வைத்துக் காதலித்தேன். இன்றும் அவன் என்னுள் நிறைந்தே உள்ளான். இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். சாகும் வரைக்கும் காதலுக்கான நீதிக்குக் களத்தில் நிற்பேன். ஆனாலும் காதலில் கூட ஒருபோதும் சிறைப்பட்டுவிட மாட்டேன். இந்தத் தெளிவை எனக்குத் தந்ததும் என் தந்தை பெரியார்தான். அவரின் பெண் ஏன் அடிமையானாள் புத்தகம்தான்.

செய்திக்கு வந்துவிடுகிறேன். வேறு வழியின்றி சங்கரை இழக்க மனமின்றி வீட்டை விட்டு வெளியேறினேன். எங்களுக்கு முழுமையாகப் படிப்பை முடித்தாக வேண்டும். அதற்குள் திருமணம் குறித்து நாங்கள் சிந்திக்கவும் இல்லை. ஆனால் என் பெற்றோர் வன்மத்தோடு எம் காதலை முறிக்கத் துடித்ததால் நாங்கள் வேறுவழியின்றி மணமுடிக்கும் முடிவுக்கு வந்தோம்.
மணமுடித்த நாளிலிருந்து நானும் சங்கரும் துரத்தப்பட்டோம். நடுத்தெருவில் நானும் சங்கரும் நடந்து செல்லும் போது என்னைக் கடத்த முயற்சி செய்தார்கள். நாங்கள் இருவரும் ஓடிப்போய் காவல் நிலையத்தில் எம்மைக் காக்கும்படி நின்றோம். என் பெற்றோர் மீது புகார் அளித்தோம். அதைச் சட்டப்படி அணுகாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து அனுப்பிவிட்டார்கள். என் பெற்றோரை காவல்துறை எச்சரித்து கூட அனுப்பவில்லை. அது அடுத்த கடத்தல் முயற்சிக்கு இட்டுச் சென்றது. இந்த முறை நான் வெற்றிகரமாகக் கடத்தப்பட்டேன். துன்புறுத்தப்பட்டேன். மந்திரிக்கும் ஒருவரிடம் கொண்டு போய் விட்டு நாட்கணக்கில் அடைத்து வைத்தார்கள். வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டேன். எல்லாவற்றையும் தாண்டி என் சங்கரிடம் வந்தடைந்தேன். அவன் எனக்குத் தாயாகவே இருந்தான் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது. என் ஆண் தாயை நான் இழந்தேன்.
தமிழ்நாட்டில் உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் சங்கர் என் கண் முன்னாலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான். என்னையும் கொல்லும் நோக்கத்தோடு என் தலையெங்கும் சரமாரியாக வெட்டினார்கள். கொலைச் செயலுக்குக் காரணமானவர்களும் ஏவிவிட்டவர்களும் என் பெற்றோர். என்னைப் பெற்று தாலாட்டி சீராட்டி வளர்த்தவர்கள் என்னைக் கொலை செய்யத் துணிந்தார்கள். சங்கரை மட்டுமல்ல அவர்கள் தங்கள் மகளையும் கொல்ல முடிவு செய்து அதைச் செய்யவும் தயங்கவில்லை. நான் உயிர் பிழைத்து சங்கர் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டுள்ளேன்.
எடுத்தவுடன் என்னைக் கொல்ல நினைக்கவில்லை. என் தாத்தா, என் உற்றார் உறவினர்கள், என் பெற்றோர் எல்லோரும் கெஞ்சுகிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் மிரட்டுகிறார்கள். எல்லாம் பலனளிக்காத போது கடத்தி வைத்து, உறவினர்களோடு தங்கவைத்து மூளைச்சலவை செய்கிறார்கள். அடித்துத் துன்புறுத்திப் பணிய வைக்கப் பார்க்கிறார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி சங்கரிடம் வந்து சேர்ந்து வாழத் தொடங்குகிறேன். இதற்குப் பிறகுதான் கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள். சங்கரை மட்டுமல்ல என்னையும்.

இதற்கெல்லாம் பிறகு என்னைத் தலைமுழுகி விட்டு அடுத்த வேலை பார்க்கலாம். நம்மையே விட்டுவிட்டு ஒருவனோடு வாழ்கிறாள் அவள் இனி நமக்கு மகளே இல்லை என்று என் பெற்றோர் கருதி இருக்கலாம். இல்லையெனில் சங்கரை மட்டும் கொலை செய்ய நினைத்திருக்கலாம். ஆனால் என்னையும் கொலை செய்ய முடிவெடுத்து கூலிப்படையை ஏவுகிறார்கள். ஏன் எனும் கேள்விக்கு விடை கண்டாக வேண்டும் இல்லையா!
என் பெற்றோர் இந்த எல்லா முயற்சிக்குப் பிறகு அவர்களிடம் ஒரு கேள்வி மிச்சமிருந்து குடைந்து கொண்டே இருக்கிறது. அது இனி எப்படி வெளியில் தலைகாட்ட முடியும். இனி எப்படி தலைநிமிர்ந்து நடக்க முடியும். சாதிச் சொந்தங்கள் காரித் துப்பமாட்டார்களா? இந்த உணர்வுகள் அவர்களை தொந்தரவு செய்கின்றன. இதுவே சங்கர் அவர்களைவிட தாழ்ந்த சாதியாக இல்லாமல் உயர்ந்த சாதியாக இருந்திருந்தால் இதே உணர்வுகளுக்கு வேலையே இருந்திருக்காது. அப்போது பேசாமல் எங்களை ஏற்றிருப்பார்கள் என்பது உறுதி. அப்படியில்லாமல் தாழ்ந்த சாதி என்பதால் உற்றார் உறவினர்கள் மத்தியில் வாழ்வது அவர்களுக்கு முள்ளின் மீதான வாழ்க்கையாக அமைகிறது. தங்கள் சாதிக் கூட்டத்திடையே நிகழ்விற்குப் பிறகு தலைநிமிர்ந்து நடக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? தங்கள் மகளால் இழந்த சாதிக் கெளரவத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்? தங்கள் மகள் இந்நேரம் அந்த தாழ்ந்த சாதிக்காரனோடு வாழ்ந்திருப்பாளே! அவன் குழந்தை ஒருவேளை இவள் வயிற்றில் உருவாகியிருந்தால் என்ற பதட்டம் வருகிறது. ஒட்டுமொத்தமாக நம் சாதிப் பெருமை கெளரவம் பாழாகிவிடுமே? இதை நேர்செய்ய ஒரே வழிதான் உண்டு பெற்ற மகள் என்றும் பார்க்காமல் கொலை செய்துவிட வேண்டியதுதான். குழந்தை பெற்றுத்தரும் பெண்ணைக் கொண்டுதான் சாதி தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. இதற்காகத்தான் அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு கற்பு ஒழுக்கம் போன்ற அயோக்கியத்தனங்கள் பெண் மீது மட்டும் கற்பிக்கப்படுகின்றன.
இதில் சங்கரைக் கொலை செய்வது அவனைப் பழிதீர்ப்பதற்காக. என்னைக் கொல்வது ஒரே ஒரு நோக்கத்திற்காக! அது குடும்பக் கெளரவம் காக்க…அதாவது சாதிக் கெளரவம் காக்க!
Honour killing என்பதை ஆணவக் கொலை என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆணவம் வேறு கெளரவம் வேறு! பெற்ற மகளால் என் பெற்றோர் ஆணவம் இழக்கவில்லை. கெளரவம் இழந்தார்கள். ஆணவம் சாதியில் மட்டும் வராது வர்க்கத்தில் வரும்; கணவன் மனைவியிடத்திலே வரும்; ஆனால் அது கொலை வரை போகாது. ஆனால் கெளரவம் சாதியில் வரும்; அந்த சாதிக் கெளரவம் மட்டும்தான் கொலை வரை போகும். அதனால் இதை கெளரவக் கொலை என்கிறோம். இதை ஒரு முன்மொழிவாக முன்வைக்கிறேன்.

என்னைக் கொலை செய்யப் பார்த்தார்கள். உயிர் பிழைத்துள்ளேன். அப்படியானால் இது கொலை முயற்சி என்ற குற்றத்தில் சேரும். அப்படியானால் இது கெளரவக் கொலை என்ற வரையரைக்குள் வராதல்லவா? வராது என்றால் கெளரவக் கொலை செய்ததாக என் பெற்றோர் மீது குற்றம் சுமத்த முடியாது என்றாகிறது. அப்படியானால் கொலை முயற்சி நடந்து என் தலையில் சரமாரியாக அறுவாள் பதம் பார்த்ததே அது என்ன வகைக் குற்றம்? கொலையை அதன் சாதியப் பின்னணி கொண்டு கெளரவக் கொலை என்கிறோம். அதேபோல சாதியப் பின்னணி கொண்டு கொலை முயற்சி என்பதைக் கெளரவக் கொலை முயற்சி என்று வரையறுக்கலாம். ஆனால், என்னைக் கடத்த முயற்சி செய்தது, இரண்டு முறை கடத்தியது, கடத்தி ஓரிடத்தில் அடைத்து வைத்தது, அடித்து வன்முறையில் ஈடுபட்டது, கொலை மிரட்டல் விடுத்தது… இவையெல்லாம் கெளரவக் கொலை ஆகாது, கெளரவக் கொலை முயற்சியும் ஆகாது, அப்படியானால் அது குற்றமா இல்லையா என்ற கேள்வியை இங்கே எழுப்ப விரும்புகிறேன். ஆம் குற்றம்தான் என்றால் அதை எப்படி வரையறுக்கலாம். கெளரவக் கொலை என்பது போல் கெளரவக் குற்றங்கள் எனச் சொல்லலாம், சொல்ல வேண்டும்.
கெளரவக் குற்றங்களுக்கு எதிராகவும் பேசியாக வேண்டும். அப்போதுதான் அது பரந்த தளத்திற்கும் பயன்படும். அப்படி கொண்டு சென்றால்தான் பெண்கள் மீது தினம் தினம் நடக்கும் இதுபோன்ற வெளிவராத குற்றங்கள் சமூகத்தின் பேசு பொருளாகும். முதலில் தான் பெற்ற மகள் என்பதால் சாதியைக் காரணம் வைத்து, இயல்பாய் மலர்ந்த காதலை சொன்ன மாத்திரத்தில் தூக்கி எறிய வேண்டும் என்பதே கெளரவக் குற்றம்தான். அப்படியொரு நிலையை நாம் உருவாக்க வேண்டும். இதில் பெற்ற மகள் என்பதால் அடிக்கலாம், வீட்டுக்குள் வைத்து பூட்டலாம் , இன்னொருவனுக்கு மணம் பேசலாம், திருமண மேடையில் அமர்த்தலாம் என்றால் இது நாகரிக சமூகம் என்று சொல்ல முடியுமா! காட்டுமிராண்டிச் சமூகத்தில்தான் இவை சாத்தியமாகும். முதலில் இவை குற்றம் என்றே பெற்றோர் நினைப்பதில்லை என்பதைக் கருதிப் பார்த்தால் இன்னும் இதன் ஆபத்து புரியும்.
ஒவ்வொரு பெண்ணின் காதல் உரிமை காக்கப்பட வேண்டும். காதலிப்பது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை! இதை சாதியின் பேரால் மறுத்துச் செய்யும் அனைத்தும் குற்றமாக்கப்பட வேண்டும். அதன்மூலம் கெளரவக் கொலைகள் எனும் தனிக் குற்ற வகையை நிறுத்த முடியும். கெளரவக் கொலை இங்கே அன்றாட நிகழ்வாகிவிட்டன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.

நான் மேற்சொன்னவற்றைஎல்லாம் கணக்கில் கொள்ளும் வகையில் சாதிய கெளரவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றச் செய்ய வேண்டும். அந்தச் சட்டம் கெளரவக் கொலையோடு கெளரவக் குற்றத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக வாழ்நாளெல்லாம் போராடுவேன். யாருடையதையும் விட என்னிடம் இருந்து வரும் குரல் இன்னும் வலிமையானது என்பதை உணர்ந்திருக்கிறேன். இன்னும் என் அறிவு பெருக்கி, வலிமை திரட்டி இந்தத் தனிச்சட்டத்திற்காகப் போராடுவேன். போராடுகிற ஆற்றல்களுக்கு துணையாக இருப்பேன்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று கேரள மாநில அரசு சட்டம் கொண்டு வந்துவிட்டது. இதே சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவர முடியுமா? நாம் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கிவிட்டோம். இது இந்தியா முழுமைக்கும் சாத்தியமா? அதேபோல் கெளரவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் ஒன்றை இந்தியா இயற்றும் என்று கேட்டுக் கொண்டும் காத்துக் கொண்டும் இருக்க முடியாது. யானைக்கு யார் கோவணம் கட்டுவது. தமிழ்நாடு இதைச் சட்டமாக இயற்ற வேண்டும், இயற்றச் செய்ய வேண்டும். ஆனால் இதை மக்கள் போராட்டங்களின் மூலமே சாதிக்க முடியும் என நம்புகிறேன். தேர்தல் அரசியலை நம்பாமல் சல்லிக்கட்டுப் போராட்டம் போல் சாதி ஒழிப்புக்காக, சாதிய கெளரவக் கொலைகளுக்கான தனிச்சட்டத்திற்காகத் தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் திரளுவார்கள். அந்த நாளை நோக்கி நம்பிக்கையோடு உழைப்பேன். அதற்குள் என் தோள்கள் சுருங்கிப் போகிற காலம் வந்தாலும் நம்பிக்கையோடு உழைத்துக் கொண்டிருப்பேன்.
கெளரவக் கொலைகள் தடுக்கப்பட்டால்தான் காதல் வெல்லும். காதல் வென்றால்தான் சாதி ஒழியும்.
சாதி ஒழிப்புதான் என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கும் சாதி ஒழிப்பிற்குக் களப்பலியான அனைத்து உயிர்களுக்கும் உரிய நீதி செய்யும்.அந்த நீதிக்கு உங்களோடு என்றென்றும் கைகோர்த்து நிற்பேன்.
நன்றி! வணக்கம்!

அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்

சித்தரவதை, பாலியல் கொடுமை…பதற வைக்கும் அசோக்குமாரின் மரண வாக்குமூலம்…!

‘அழகி’ பட்டங்களும் கார்ப்பரேட் போதையும்: -ஆர்த்தி..!

இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்

பன்னீரை ஒதுக்கி ஓரம் கட்டிய எடப்பாடி பழனிசாமி…!

ஆர்.கே நகர் என்பது திமுகவுக்கு வெகுமதி மிக்க யுத்தம்…!

ஆடம்பரவாதி இசக்கிமுத்துவும் உத்தமர் அன்புச் செழியனும்…!
அசோக் குமார் மரணம்: விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த கரு பழனியப்பன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*