மீனவ மக்களிடம் ஸ்டாலின்..!

ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்களையும், விவசாயிகளையும் இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முக நூல் குறிப்பில்.

இன்று (04-12-2017) கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புயல் சேதங்களை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன். கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட கிள்ளியூர், நீரோடைத்துறை ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு, அங்குள்ள வட்டார புயல் தகவல் மையத்துக்கு சென்று தற்போதைய நிலவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.

பின்னர், விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட இலவன்வலை பகுதியில் ரப்பர், தேன்னை, வாழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அவர்தம் குறைகளை கேட்டறிந்து ராஜாக்கமங்கலம் பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை – எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினேன்.

மேலும், முட்டம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகின் மூலம் கடலோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளையும், சேதங்களையும் நேரில் பார்வையிட்ட பின்னர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஓகி புயல் நிவாரண நடவடிக்கைகள், சீரமைப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், 6 தொகுதிகளில் நான் மேற்கொண்ட ஆய்வின்போது, பொதுமக்கள் அளித்த கோரிக்கை விவரங்களை எடுத்துரைத்து, உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

தமிழக அரசின் சார்பில் 29 ஆம் தேதியன்று முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டோம் என்று மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால், எந்தவொரு முன்னெச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிடவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், எந்தவகையிலும் புயல் குறித்த அறிவிப்பை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை 1000 வரை இருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் அரசின் தரப்பில் இன்னும் முறையான கணக்கெடுப்பு கூட நடத்தப்படவில்லை. தமிழக அரசின் சார்பில் 25 கோடி ரூபாய் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் இதே புயலால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இங்கு புயல் – மழையால் இறந்துள்ள 7 பேருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் ரூ.28 லட்சம் தவிர்த்து, மீதமுள்ள 24 கோடியே 22 லட்சம் ரூபாய் வேறு யாருக்கும் நிவாரணத் தொகையாக வழங்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அந்த நிவாரணத் தொகை எந்தவகையில் வழங்குகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதைத்தான், பொதுமக்களும், மீனவர்களும், விவசாயிகளும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கும், சேதமடைந்த வீடுகளை சீரமைக்கவும், இடிந்த வீடுகளைக் கட்டவும் உடனடி உதவிகளை இந்த அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இந்த புயல் பாதிப்பை “தேசிய பேரிடராக” அறிவித்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் உட்கட்டமைப்பை உருவாக்க முதல் கட்டமாக மத்திய அரசு உடனடியாக 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

பாதிப்பு குறித்து கணக்கு எடுக்கப்பட்டு மத்திய அரசிடம் நிதி கோரப்படும் என்று “இரட்டை ஊழல் துப்பாக்கிகள்” பேசி வருகிறார்கள். ஆனால் வெள்ளப் பாதிப்பு, வர்தா புயல் பாதிப்பு, வறட்சி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்காக 88 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசிடம் குதிரை பேர அதிமுக அரசு கேட்டது.

உள்கட்சி பஞ்சாயத்திற்காக டெல்லியில் பிரதமர் மோடியை திடீர் திடீரென்று சந்தித்த ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இந்த நிதியை கேட்டுப் பெறவில்லை. அதே போல் மத்திய பா.ஜ.க. அரசும் இந்த “எடுபிடி” அரசு இருப்பதால், தமிழகத்தின் நலன்களை காப்பாற்ற முன் வருவதில்லை.

88 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்ட மாநிலத்திற்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஒதுக்கியுள்ள நிதி வெறும் 2 ஆயிரத்து 12 கோடி மட்டுமே என்பதை பார்க்கும் போது தமிழக மக்களின் நலனில் பா.ஜ.க. அரசுக்கும், அதனுடன் கைகோர்த்து நிர்வாகத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் குதிரை பேர அதிமுக அரசுக்கும் எந்த கவலையும் இல்லை என்பதை தான் வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், 6 தொகுதிகளில் நான் நேரில் மேற்கொண்ட ஆய்வின்படி இந்த அரசிடம் கேட்டுக்கொள்ள விரும்புவது, ஆடம்பர விழாக்களை நடத்திக் கொண்டிருப்பதை தவிர்த்து, உடனடியாக புயல் நிவாரணப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட வேண்டும். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் எல்லாவிதத்திலும் பக்கபலமாக இருந்து, துணை நின்று, பணிகளை வேகப்படுத்தும் முயற்சிகளை நான் மேற்கொள்வேன் என்கிற உறுதியை பாதிக்கப்பட்ட பொதுமக்களிடத்தில் தெரிவித்தேன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*