சங்கர் கொலையில் 8 பேரும் குற்றவாளிகள்:நீதிமன்றம்..!

உடுமலையில் வைத்து பட்டப்பகலில் பொது வெளியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக சங்கரை வெட்டிக்கொலை  செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 8 பேரும் குற்றாவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கெளசல்யா என்பவரைக் காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதியன்று, பட்டப்பகலில் உடுமலையில் வைத்து சங்கர் மற்றும் கெளசல்யா இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. அதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி கெளசல்யா படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று குணமடைந்தார்.

சங்கர் படுகொலை தொடர்பாக கொலை, வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் உடுமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, கெளசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரைக் கைதுசெய்தனர்.

சங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், ஏற்கெனவே இருதரப்பு வாதங்கள் நிறைவுற்று, இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் 8 பேரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியிருக்கிறது.
இதில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி தனக்கு தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதிகள் “எதன் அடிப்படையில் தண்டனை குறைப்பு கேட்கின்றீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். இந்த தீர்ப்பு பற்றி சங்கரின் மனைவி கவுசல்யாவிடம் இத்தீர்ப்பு குறித்து கேட்ட போது “குற்றவாளிகளை குற்றவாளிகள் என்றுதானே சொல்ல வேண்டும்” என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*