ஜல்லிக்கட்டு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

ஆர்.கே.நகர் தேர்தலை நேர்மையாக நடத்துமா ஆணையம்?

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து ‘பீட்டா’ அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டி அரசியல் சாசன பாதுகாப்பை பெற முடியுமா என்பதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட் டனர்.

காளை மாடுகளை காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதையடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையாக தடை விதித்தது. தமிழகத்தில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, இந்திய மிருகவதைத் தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு திருத்தங்கள் செய்து அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கியது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசின் சட்டம், உச்ச நீதிமன்ற தடையை மீறியதாகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள விலங்குகளுக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்றும் கூறப்பட்டது. மேலும், இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் 15 பேர் இறந்ததாகவும் 1948 பேர் காயமடைந்ததாகவும் 5 காளை மாடுகள் இறந்ததாகவும் கூறி இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

மேலும், கர்நாடகாவில் பாரம்பரியமாக நடக்கும் எருது பந்தயத்தை தடையின்றி நடத்த கொண்டுவரப்பட்ட சட்டத்தை எதிர்த்தும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் கேள்வி

இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ரோஹிங்டன் நாரிமன் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, மத்திய அரசின் பொதுவான சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் கொண்டு வர முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் ஜல்லிக்கட்டுப்போட்டி அரசியல் சாசன பாதுகாப்பை பெற முடியுமா என்பதை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதனால், பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது உறுதியாகி உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*