குஜராத் தேர்தல் முடிவுகள் :பாஜக வீழ்ச்சியின் தொடக்கம்..!

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா 99 இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியது. எனினும் காங்கிரஸ் 77 இடங்களையும் அதன் கூட்டணி கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக குஜராத்தில் காங்கிரசுக்கு இவ்வளவு தொகுதிகள் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இறுதிச் சுற்று ஓட்டுகள் எண்ணி முடிக்கப்படும் வரை பா.ஜனதாவுக்கு கடும் சவாலாக காங்கிரஸ் திகழ்ந்தது.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மிகுந்த திருப்தியை தருகிறது. முடிவுகள் நல்ல விதமாக உள்ளன. 3 மாதங்களுக்கு முன்பு நான் குஜராத்துக்கு சென்றபோது காங்கிரசுக்கு வாய்ப்பு இருக்கும் என்று யாரும் கூறவில்லை.

என்றபோதிலும் நாங்கள் இந்த மூன்று மாதங்களும் கடுமையாக உழைத்தோம். தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு நிச்சயம் பெரும் அதிர்ச்சியை அளித்து இருக்கும்.

தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமரால் பதில் சொல்ல முடியவில்லை. குஜராத்தை முன்மாதிரி மாநிலம் எனக் கூறி வந்த பிரதமர் மோடியால், அம்மாநில மக்கள் அன்றாடம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து எதுவுமே கூறவில்லை. மாநிலத்தின் வளர்ச்சி பற்றியும் அவர் எதுவும் குறிப்பிடவில்லை. அதேபோல் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் பிரச்சினை பற்றி அவர் பேசவே இல்லை.

கடந்த 3 மாதங்களாக நான் அங்கு பிரசாரம் செய்ததில் மோடியின் குஜராத் முன்மாதிரி வளர்ச்சியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவாக உணர முடிந்தது. அவர்கள்(பா.ஜனதா) செய்த பிரசாரம் வியாபார தந்திரம் மிக்கதாக இருந்தது. ஆனால் அதன் உட்புறம் மிகப்பெரிய வெற்றிடம் காணப்பட்டது.

குஜராத் தேர்தல் முடிவுகள் மோடி மீதான நம்பகத்தன்மையை தீவிர கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது அவர் ஊழல் பற்றி பேசினார். ஆனால் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் நடந்த முறைகேடு பற்றியோ, பா.ஜனதா தலைவர் அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் ஊழல் குறித்தோ ஒருவார்த்தை கூட அவர் பேசவே இல்லை.

கடந்த 3, 4 மாதங்களில் நான் குஜராத்தில் பிரசாரம் செய்தபோது மக்கள் என் மீது மிகுந்த அன்பு காட்டினார்கள்.

உங்கள் எதிரி எவ்வளவு கோபத்தை காட்டினாலும் நீங்கள் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம், அதை அன்பால் வென்று விடலாம் என்கிற மிகப்பெரிய பாடத்தை அவர்கள் எனக்கு கற்றுத் தந்து உள்ளனர். அதை குஜராத் மக்கள் மோடிக்கு மிகப் பெரிய செய்தியாகவும் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*