சசிகலா உறவினர் வீடு மற்றும் நிறுவனங்கள்: ரெய்ட் விபரங்கள்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வருமான வரித்துறை தமிழகத்தில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. ‘ஆப்ரேசன் க்ளீன் மணி’ என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்ததாக கருதப்படும் நபர்களின் வீடு மற்றும் நிறுவனங்களில் சோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றிருக்கும் சசிகலாவின் உறவினர் வீடு மற்றும் நிறுவனங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சென்னை, கோவை நகரங்களில் 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னை அடையார் கற்பகம் கார்டனில் உள்ள சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் கார்த்திகேயனின் இல்லம், மிடாஸ் நிறுவனத்துக்கு அட்டைப் பெட்டி சப்ளை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாதனின் வீடு, மண்ணடியில் உள்ள கார்த்திகேயனின் நண்பருக்கு சொந்தமான குடோன், சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தில் உள்ள மின்சார சாதனங்கள் சேமித்து வைக்கும் ஸ்ரீசாய் குடோன் மற்றும் மிடாஸ் மதுபான ஆலையில் சோதனை நடத்தப்பட்டது.

அதேபோல் கோவையை அடுத்த மயிலேறிபாளையத்தில் எஸ்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் சந்திரசேகர், மிடாஸ் நிறுவனத்துக்கு காலி பாட்டில்கள் சப்ளை செய்து வருகிறார். 5 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் நேற்று காலை எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு சென்று சோதனை நடத்தினார்கள். மாலை வரை நடைபெற்ற இந்த ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் பற்றிய தகவல்கள் எதையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*