நீதிமன்ற உத்தரவையும் மீறி 3-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர் போராட்டம்..!

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு ஐகோர்ட்டு தடைவிதித்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சி.ஐ.டியு. அலுவலகத்தில் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட 17 தொழிற்சங்கங்கள் அடங்கிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.

கூட்டம் முடிந்து வெளியே வந்ததும், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், சி.ஐ. டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்களுடைய வேலைநிறுத்தத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்து இருப்பதாகவும், அதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தொழிலாளர்களின் முக்கிய பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய தொழிற்சங்கத்தை சேர்ந்த யாரையும் கலந்து பேசாமல் ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்ட முடிவாக ஐகோர்ட்டு தீர்ப்பை நாங்கள் கருதுகிறோம்.

நீதிமன்றத்தில் இருந்து தாக்கீதுகள் வருமானால், அதை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வதற்கு தயார்நிலையில் இருக்கிறோம். எங்களுடைய பிரச்சினைகள் தீரும்வரை வேலைநிறுத்தம் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நிருபர்கள் அவர்களிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் போராட்டம் தொடர்ந்தால் பொதுமக்களுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தாதா?

பதில்:- நீதிமன்றம் எங்களுடைய கருத்தையும், நியாயத்தையும் கேட்காமல் ஒரு முடிவை சொன்னால் அது இயற்கை நீதிக்கு விரோதமானது. திங்கட்கிழமை நீதிமன்றத்தில் எங்களுடைய கருத்தை எடுத்து வாதிட போகிறோம். அதன்பிறகு வரும் முடிவை பார்ப்போம். எழுத்துபூர்வமான எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை.

கேள்வி:- பயணிகளை பாதியில் இறக்கிவிட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளாரே?

பதில்:- வேலைநிறுத்தம் என்று நாங்கள் அறிவிக்கும்போது, எல்லா தொழிலாளர்களுக்கும் பஸ்களில் இருக்கும் பயணிகளை பஸ் நிலையத்தில் இறக்கிவிட்ட பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுங்கள் என்று கூறினோம். சில இடங்களில் இருப்பதை நாங்களும் கவனிக்கிறோம்.

கேள்வி:- போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பாக்கி தொகையை ஒரே தவணையில் வழங்குவதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். அப்படி வழங்கினால் நீங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட தயாரா?

பதில்:- 7 ஆயிரம் கோடி ரூபாயை அவர் வழங்கிவிட்டால் நாங்கள் கூடி பேசி முடிவு செய்வோம். கடந்த செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து நிலுவை தொகையையும் வழங்கிவிடுவதாக 3 அமைச்சர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அதுவே இன்றுவரை நடக்கவில்லை. 7 ஆயிரம் கோடி எங்கள் பணம். அதை கொடுக்க கருணை எதற்கு? பாசம் எதற்கு? எங்களுடைய பாக்கி பணத்துக்கு 18 சதவீதம் வட்டி போட்டு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பதில் அளித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*