ஆளுநர் உரை தலைவர்கள் கருத்து..!

என்னுடைய மிகப்பெரிய சொத்தே என் அறிவு தான் : டொனால்ட் ட்ரம்ப்

ரஜினியின் முத்திரைக்கு ஆபத்து: உரிமை கோரும் மும்பை நிறுவனம்

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்: தினகரன்

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றியது தொடர்பாக தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
”ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா மாதிரி அமைந்துள்ளது. உரையில் வருவாய் குறைந்துள்ளதை ஒத்துக்கொண்டுள்ளனர். வருவாய் குறைந்துள்ள நிலையில் அறிவித்துள்ள திட்டங்களை எப்படி நிறைவேற்றப்போகிறார்கள் என்பது கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் உள்ளது. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பார்கள். திட்டங்களை நிறைவேற்ற நிதியை எப்படி கொண்டு வரப்போகிறார்கள். எதாவது மந்திரக்கோல் வைத்துள்ளார்களா? தெரியவில்லை.

ஆளுநர் உரையில் கடன் சுமை பற்றி ஒரு வரியும் குறிப்பிடப்படவில்லை. தொழில் வளர்ச்சி பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அதை எப்படி சரி செய்யப் போகிறோம் அந்த விளக்கமும் இல்லை. வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கும் முயற்சியில் எப்படி ஈடுபடப் போகிறோம் என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பாக விவசாயிகள் வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகள் எப்படி நிறைவேற்ற இந்த அரசு முன் வர இருக்கிறது என்பது பற்றியும் சொல்லவில்லை என்பது வேதனைக்குரியதாக உள்ளது. ஆளுநர் உரையின் தொடக்கத்தில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரிக்கு ஒரு பெரிய பாராட்டு பத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஆளுநர் உரை என்பது, மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையைத்தான் படிப்பார்கள், அதுதான் மரபு. எனக்கு மத்திய அரசு தயாரித்து கொடுக்கும் உரையைத்தான் ஆளுநர் உரையில் படிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் வந்துள்ளது. ஆகவே நான் முன்பே சொன்னது போல் ஆளுநர் உரை மஸ்கோத் அல்வாவாக அமைந்துள்ளது.

அலுவல் ஆய்வுக்குழுவில் முதல்வர் பதிலுக்கு முன்பு சட்டமன்ற மரபுப்படி எதிர்க்கட்சித்தலைவர் பேசிய பின்புதான் முதல்வர் பேச வேண்டும் என்று உள்ளது. இடையில் சூழ்நிலை காரணமாக அது மாறியது அதையே தொடர வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

நாங்கள் சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் பேசிய பின்னர் முதல்வர் பேச வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதை அலுவல் ஆய்வுக்குழுவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு ஏன் அலுவல் ஆய்வுக்குழுவை கூட்டவேண்டும், நீங்களே கூடி அறிவித்திருக்கலாமே என்று வெளிநடப்பு செய்தோம்.”இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
டாக்டர் ராமதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி)
”தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆற்றிய உரை, ஆளுநர் உரைக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் வெற்று முழக்கங்களின் தொகுப்பாக உள்ளன. ஆளுநர் உரை என்பது வரும் ஆண்டில் அரசு செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான கொள்கை அறிவிப்புகளின் தொகுப்பாக அமைந்திருப்பது வழக்கம். ஆனால், ஆளுநர் உரையில் ஒரே ஒரு புதிய அறிவிப்பு கூட இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஆளுநர் ஆற்றும் உரையில் முழுக்க முழுக்க முதல்வரின் புகழ் பாடும் வாசகங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். தம்மை ஜெயலலிதாவின் ஆண் வடிவமாக கருதிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் உரையை தமது புகழ்பாடும் பாராட்டுப் பத்திரமாக தயாரித்து ஆளுநரிடம் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறார். இத்தகையதொரு குப்பைக் கருத்துக்களை தம்மால் படிக்க முடியாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மறுத்திருக்க வேண்டும். ஆனால், தமது அரசியல் சட்ட கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக எழுதிக்கொடுத்ததை அவர் படித்து விட்டு சென்றுள்ளார். ஆனால், ஆளுநர் உரையால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புளங்காகிதம் அடைந்து கொள்வதைத் தவிர தமிழகத்திற்கும், மக்களுக்கும் எந்த பயனுமில்லை என்பதே உண்மை.

ஒக்கிப் புயலில் சிக்கி நடுக்கடலில் தவித்த மீனவர்களைக் காப்பாற்றுவதில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதாக ஆளுநர் கூறியிருக்கிறார். உண்மையில் ஒரே ஒரு மீனவரைக் கூட மத்திய, மாநில அரசுகள் காப்பாற்றவில்லை. அனைத்து மீனவர்களையும் சக மீனவர்கள்தான் போராடி மீட்டனர். இத்தகைய சூழலில் மீனவர்களை தமிழக அரசு தான் மீட்டதாகக் கூறி பாராட்டுவது உண்மைக் கலப்பற்ற பொய் ஆகும். ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களில் 238 பேர் மீட்கப்படவில்லை. அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்களின் இறுதிச்சடங்கை குடும்பத்தினர் செய்து முடித்து விட்டனர். இத்தகைய சூழலில், அவர்கள் இறந்து விட்டதாக அறிவித்து அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதை விடுத்து, கடைசி மீனவரை மீட்கும் வரையில் மீட்புப் பணியைத் தொடர அரசு உறுதிபூண்டிருப்பதாக ஆளுநர் கூறுவது குரூரமான நகைச்சுவையாகும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தொலைநோக்குத்திட்டம் 2023-ஐ செயல்படுத்த இந்த அரசு உறுதி பூண்டிருப்பதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட அபத்தம் எதுவும் இருக்க முடியாது. இந்த திட்டத்திற்கான கால அவகாசம் 11 ஆண்டுகள் ஆகும். இதற்கான முதலீடு ரூ.15 லட்சம் கோடியாகும். திட்டம் அறிவிக்கப்பட்டு வரும் மார்ச் மாதம் 6 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை ஒரு விழுக்காடு தொகை கூட செலவிடப்படவில்லை. இதனால் திட்ட மதிப்பு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரித்து விட்ட நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில் இவ்வளவு தொகையை தமிழக அரசு எவ்வாறு முதலீடு செய்யப்போகிறது? என்பதை தமிழக ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

2015-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டில் ரூ.62,738 கோடி மதிப்பில் 61 தொழில் திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் 96,341 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் மக்களை ஏமாற்றும் செயலாகும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் ரூ.3636 கோடி மதிப்பிலான 7 பணிகள் செயல்படுத்தி முடிக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றின் மூலம் 9775 பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறி அந்தத் திட்டங்களை 29.01.2016 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆனால், அதன்பின் இரு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இப்போது தான் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. அதிமுக அரசின் பித்தலாட்ட அரசியலை முன்னுக்குப்பின் முரணான அறிவிப்புகள் அம்பலப்படுத்துகின்றன.

மகளிருக்கு இரு சக்கர ஊர்தி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படக்கூடிய மானியத்தின் உச்சவரம்பு 20,000 ரூபாயிலிருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி அரசு பதவியேற்ற முதல் நாளிலேயே இதற்கான அரசாணைப் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதன்பின் ஓராண்டாகியும் இத்திட்டம் நடைமுறைக்கு வராத நிலையில் அதற்கான மானியத்தை அதிகரிப்பதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

உழவர்கள் நலனுக்காகவோ, மாணவர்கள் நலனுக்காகவோ, வேலைவாய்ப்பை பெருக்கவோ, வறட்சியைப் போக்கவோ எந்த திட்டமும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்படவில்லை. மாறாக அரசுக்கு தகுதியற்ற பாராட்டுகள் பொழியப்பட்டிருக்கின்றன. வழக்கமான ஆளுநர் உரைகள் பழைய மொந்தையில் புதிய கள்ளாக இருக்கும். ஆனால், இந்த ஆளுநர் உரை பழைய மொந்தையில் புளித்துப்போன கள்ளாக உள்ளது” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்)
”புதிய ஆளுநரின் உரை போலி வாக்குறுதிகளும், பொய்யான தகவல்களும் கொண்டதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது. ஒட்டுமொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கும் உரை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட்டு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சட்டப்பேரவையில் ஆற்றிய உரை மிகப் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் வணிகர்கள் மட்டுமின்றி, வருவாய் குறைந்து மாநில அரசும் விழிபிதுங்கி நிற்கும் வேளையில் அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக ஆளுநர் பாராட்டியிருப்பது வெந்த புண்ணில் விரல்விட்டு ஆட்டுவதைப்போல இருக்கிறது.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைத் தமிழக அரசு முடிவுக்குக் கொண்டுவராமல் இழுத்தடிப்பதால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் சொல்லமுடியாத துன்பத்துக்கு ஆளாகிவருகின்றனர். பல மாதங்களாக நீடித்துவரும் அவர்களது பிரச்சனை குறித்து ஆளுநர் மவுனம் சாதித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு முதலானவை குறித்து வழக்கம்போல சடங்குத்தனமான கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. படிப்படியாக டாஸ்மாக கடைகள் மூடப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. அதைப்பற்றி ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நிறுத்தப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சரே அறிவித்துவிட்ட நிலையில் இன்னும் தேடும் பணி நடப்பதாக ஆளுநர் குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதுபோலவே தமிழக மீனவர்கள்மீதான் இலங்கைக் கடற்படையின் தாக்குதல் குறைந்துவிட்டதாகம் கூறப்பட்டுள்ளது. உண்மைக்கு மாறான இத்தகைய தகவல்களை அவையில் ஆளுநர் தெரிவிப்பது அவை மரபை மீறிய செயலாகாதா என்பதை பேரவைத் தலைவர் விளக்கவேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிப்பதைப்பற்றி ஆளுநர் உரையில் எதுவுமே இல்லை. மாறாக அங்கே பிரதமர் வந்து பார்வையிட்டதைப் பாராட்டியிருக்கிறார்.

மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு நன்றி சொல்லவும், பிரதமரைப் பாராட்டவுமே இந்த உரையை ஆளுநர் பயன்படுத்திக்கொண்டுள்ளார். அத்துடன் ஜெயலலிதா அறிவித்த மதுவிலக்கு திட்டத்தைப் புறக்கணித்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற கேள்வியே எழுகிறது.

ஒட்டுமொத்தத்தில் போலி வாக்குறுதிகளும் பொய்த் தகவல்களும் கொண்ட பயனற்ற உரையாகவே ஆளுநர் உரை அமைந்துள்ளது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*