தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி எம்.எல். ஏ.க்கள் 21 பேர் மந்திரிகளின் பாராளுமன்ற செயலாளராக நியமிக் கப்பட்டதால், ஆதாயம் பெறும் இரட்டை பதவி தடை சட்டத்தின் கீழ் அவர்களுடைய எம்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி ராஷ்ட்ரீய முக்தி மோர்ச்சா என்ற அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 21 எம்.எல்.ஏ.க்களை பாராளுமன்ற செயலாளராக நியமித்தது செல்லாது என தீர்ப்பு கூறியது.
இதைத்தொடர்ந்து இரட்டை பதவி வகித்த 21 பேரின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி பிரசாந்த் பட்டீல் என்ற வக்கீல் ஜனாதிபதியிடம் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தேர்தல் கமிஷனின் பரிசீலனைக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்தார். மேலும் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் கமிஷனிடம் முறையிட்டது. இந்த நிலையில் ஜர்னைல் சிங் என்ற எம்.எல்.ஏ. பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்ததால், மீதமுள்ள 20 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிப்பது பற்றி கடந்த 19-ந் தேதி ஜனாதிபதிக்கு தேர்தல் கமிஷன் சிபாரிசு செய்தது.
தேர்தல் கமிஷனின் இந்த முடிவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தேர்தல் கமிஷன் முடிவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இந்தநிலையில், ஆதாயம் பெறும் இரட்டை பதவி வகித்த 20 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்குமாறு தேர்தல் கமிஷன் வழங்கிய சிபாரிசை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். 20 எம்.எல்.ஏ.க்கள் பதவி இழந்ததை தொடர்ந்து, அவர்கள் உறுப்பினர்களாக இருந்த சட்டசபை தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. இந்த நிலையில், ஜனாதிபதி முடிவுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*