பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: மக்கள் அதிர்ச்சி

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்: டிரெண்டிங் ஆகும் #ineedajob

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ள காரணத்தால், இதனால் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

நேற்று ஒரு பீப்பாய் பெட்ரோல் விலை சர்வதேச சந்தையில் 69.41 அமெரிக்க டாலர்கள் என்னும் அளவை எட்டியது. இதேபோல் டீசலின் விலை ஒரு பீப்பாய் 63.99 அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. இதனால் இந்தியாவின் அனைத்து நகரங்களில் நேற்று பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 72 ரூபாய் 38 காசுகளாக (72.23) இருந்தது. அதே நேரம் சென்னையில், லிட்டர் 75 ரூபாய் 6 காசுகளாகவும் (74.91), கொல்கத்தாவில் 75 ரூபாய் 9 காசுகளாகவும் (74.94), மும்பையில் மிக அதிகபட்சமாக 80 ரூபாய் 25 காசுகளாகவும் (80.10) இருந்தது.

இதேபோல் டீசல் விலையும் கடுமையாக உயர்ந்தது. டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் டீசல் 63 ரூபாய் 20 காசுகளாகவும் (63.01), இது சென்னை ரூ.66.64 (66.44), கொல்கத்தாவில் ரூ.65.86 (65.67), மும்பை ரூ.67.30 (67.10) ஆகவும் இருந்தது. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டு இருப்பது முந்தைய நாள் விலை நிலவரம் ஆகும்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.தற்போது, மத்திய அரசு பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக ஒரு லிட்டருக்கு 19 ரூபாய் 48 காசுகளும், டீசலுக்கு 15 ரூபாய் 33 காசுகளும் விதிக்கிறது. இது தவிர மாநில அரசுகள் இவற்றின் மீது மதிப்பு கூட்டு வரி வசூலிப்பதால் பெட்ரோல், டீசல் மீதான விலை இன்னும் கூடுகிறது.தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இவற்றின் மீதான வரிகளை குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து எண்ணெய் அமைச்சகம், மத்திய நிதி அமைச்சகத்திடம் 2018-19-ம் ஆண்டு தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் உற்பத்தி வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த தகவலை எண்ணெய் அமைச்சகத்துறை செயலாளர் கே.டி.திரிபாதி தெரிவித்தார். எனினும் இதுபற்றிய விரிவான தகவல்களை அவர் பகிர்ந்துகொள்ள மறுத்து விட்டார்.

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள வேளையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*