காவல்துறையினர் அராஜகம் கண்டிக்கத்தக்கது: முக ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கொளத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது 1966-ம் ஆண்டு அவரால் திறக்கப்பட்ட சமூக நலக்கூடம் 52 ஆண்டுகளாக பாழடைந்து யாரும் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இதை நவீன திருமண மண்டபமாக மாற்றி தர வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர். நான் எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடி ஒதுக்கி இதை கட்டி தருமாறு மாநகராட்சிக்கு ஏற்கனவே கடிதம் கொடுத்தேன். ஆனால் சட்ட விதிகளை காட்டி கட்ட முடியாது என்றனர். நான் இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாடினேன். இந்த சூழ்நிலையில் மாநகராட்சியே இதை கட்ட இப்போது முன் வந்திருப்பதை நான் வரவேற்கிறேன். இன்னும் 1 வாரத்தில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு 1 மாதத்தில் கட்டிட பணிகள் தொடங்கப்படும். குளிர்சாதன வசதியுடன் இந்த திருமண மண்டபம் அமைய உள்ளது.

கே:- காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் சந்திக்க உள்ளார். வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் சித்தராமையாவை சந்திப்பது சரியாக இருக்குமா?

ப:- கர்நாடக முதல்-மந்திரியை தமிழக முதல்- அமைச்சர் சந்திக்க போகிறாரா? இல்லையா? என்பது வேறு விவகாரம்.

ஆனால் சந்திக்க போவதாக செய்தி வருகிறது. இது வரவேற்கத்தக்கது. இதை அவர் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். இருந்தாலும் காலம் கடந்து சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எனது கோரிக்கை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துச் சென்று கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து அழுத்தம் கொடுத்தால் தான் பலன் இருக்கும். தேவைப்பட்டால் அனைத்து கட்சி தலைவர்களையும் முதல்- அமைச்சர் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
கே:- பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி இருக்கிறார்களே?

ப:- மறியல் போராட்டத்தை முறியடிக்க போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டு தடியடி நடத்தும் நிலை கண்டிக்கத்தக்கது. அந்த போக்கை கை விடவேண்டும்.
கே:- பஸ் கட்டண உயர்வை அரசு முழுமையாக திரும்ப பெறாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை ஓரிரு நாளில் அறிவிப்போம் என்று கூறி இருந்தீர்களே?

ப:- அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஏற்கனவே எடுத்த முடிவுபடி மறியல் போராட்டம் நடத்தி சிறையில் இடம் இல்லாத காரணத்தால் திருமண மண்டபங்களில் தங்க வைத்து மாலையில் விடுதலை செய்தனர். தொடரும் இந்த போராட்டத்தை நடத்துவது குறித்து மீண்டும் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை வருகிற 6-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் கூட்டி முடிவு எடுப்போம்.
கே:- குட்கா வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்குகள் தாமதப்படுத்தப்படுகிறதா?

ப:- 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 வாரத்தில் தீர்ப்பு வந்துவிடும். தீர்ப்புக்கு பின் தமிழகத்தில் ஆட்சி நீடிக்க வாய்ப்பு இல்லை. குட்கா வழக்கில் தி.மு.க.வில் நான் உள்பட 21 பேருக்கு நோட்டீசு அனுப்பி இருந்தனர். அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளோம். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்திருந்தனர். அந்த வழக்கில் 13-ந் தேதியில் இருந்து விசாரணை நடைபெற உள்ளது.
கே:- கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை தாக்கியவர் திடீரென மரணம் அடைந்திருக்கிறாரே?

ப:- இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும்.
கே:- உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்து விட்டாரா? இல்லையா? எப்போது வருவார்?

ப:- அவரிடமே கேளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*