குட்கா முறைகேடு: சிபிஐ விசாரணை வருமா?

குட்கா ஆவணங்கள் மாயமானது பற்றி ராமமோகன் ராவ்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணை நடத்தக் கோரி திமுக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை செய்ய சுகாதாரத் துறை அமைச்சர், அப்போதைய போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு குட்கா தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்துள்ளனர் என்றும், இந்த ஊழலை சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது, ஜெ.அன்பழகன் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். அவர், இந்த முறைகேட்டில் பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார். வழக்கு கடந்த 24ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘மத்திய அரசு அதிகாரிகள் ஒரு சிலர் மீதே குற்றச்சாட்டு உள்ளது. எனவே மாநில காவல்துறை விசாரித்தாலே போதும், சிபிஐ விசாரணை தேவையில்லை. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது. மாநில காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் சிபிஐ விசாரணை செய்வது கடினம். நீதிமன்றம் வேண்டுமானால் எங்கள் விசாரணையை கண்காணிக்கலாம். அதற்கேற்றவாறு குறிப்பிட்ட கால இடைவெளியில் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறோம் என்றார்.

இதையடுத்து, உணவு பாதுகாப்பு ஆணையர் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி, மென்று தின்னும் புகையிலையை தடுக்கும் வகையில் எவ்வித உத்தரவை பிறப்பித்தாலும், நீதிமன்றத்தை நாடி தடை வாங்கிவிடுகின்றனர். குட்கா மீதான தடையை முழுமையாக அமல்படுத்திவருகிறோம் என்று வாதிட்டார்.அப்போது, தலைைம நீதிபதி, அரசு சார்பில் ஒவ்வொருவராக ஆஜராகி, சிபிஐ விசாரணை தேவையில்லை என்று வாதிடுவதைப் பார்க்கும்போது, இதில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது. சிபிஐ விசாரணைக்கு ஒத்துக்கொண்டு, நீங்கள் ஏன் அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கக்கூடாது? என்று கேட்டனர்.

பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி வாதிடும்போது, ‘இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறைதான் விசாரிக்கிறது. அவர்களின் விசாரணை குறித்து டி.ஜி.பிக்கு அறிக்கை அளிக்க வேண்டியதில்லை. ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கீழ்தான் லஞ்ச ஒழிப்பு துறை செயல்படுகிறது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை’ என்றார். இதை தொடர்ந்து, ஜெ.அன்பழகன் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, வருமான வரித்துறையிலிருந்து தலைமை செயலாளர், டிஜிபிக்கு ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறைகேடுக்கு துணைபுரிந்த அனைத்து அதிகாரிகளையும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் பாதுகாக்க நினைக்கிறது. 4 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் தொடர்புடைய வழக்கு என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கேட்கிறோம் என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் எழுத்துப் பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, தமிழக அரசு மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.ஜெ.அன்பழகன் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்தார். அதில், புகையிலை நிகோடின் உள்ள பான்மசாலா தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவது சட்டவிரோதமில்லை என்று உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வாதிடப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பதவி மாநில டிஜிபியின் அதிகாரத்தின்கீழ் உள்ள பதவியாகும். சிபிஐ இயக்குநர் பதவியைப் போல் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பதவிக்கு கால வரம்பு கிடையாது. எந்த நேரத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் வேறு துறைக்கு மாற்றம் செய்யப்படலாம். இதற்கு உதாரணம், சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த ஜெயக்கொடி வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு துறைக்கு மாற்றப்படலாம். டிஜிபியின் அதிகாரத்தின்கீழ் பணியாற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையால் டிஜிபி, அமைச்சர், உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடியாது. எனவே, இந்த முறைகேட்டை சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*