வளர்ச்சி :தாயின் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்..! video

வளர்ந்து வரும் நமது இந்தியாவில் பிச்சை எடுப்பதை பலர் தொழிலாக கொண்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் பிச்சைக்காரர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றனர். குறிப்பாக கோவில்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பிச்சை எடுப்பதை கண்கூடாக காண முடியும். ஓடும் ரெயில்களில் கூட தூங்குவோரை தட்டி எழுப்பி பிச்சை எடுக்கும் சம்பவமும் நாளுக்கு நூள் அரங்கேறி வருகிறது. இது அவர்களது தொழில். இந்த தொழில் மூலம் பலர் லட்சாதிபதி ஆகியிருப்பதும் நடந்துள்ளது.

ஆனால் தாயின் இறுதி சடங்குக்கு சிறுவர்கள் பிச்சை எடுத்த சம்பவம் கண்கலங்க செய்துள்ளது. இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன். கூலி வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி விஜயா (வயது 40). இவர்களுக்கு மகன்கள் மோகன் (14), வேல்முருகன் (13), மகள் காளீஸ்வரி ஆகியோரும் உள்ளனர்.கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காளியப்பன் திடீரென இறந்து போனார். இதனால் விஜயா அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் பிஞ்சு முகங்களாக இருந்த தனது குழந்தைகளை பர்த்து அவர் தனது மனதை தேற்றிக் கொண்டார். இவர்களுக்காகவாவது நாம் வாழ வேண்டும் என முடியு செய்தார். அதன்படி விஜயா கூலி வேலை பார்த்து தனது குழந்தைகளை வளர்த்து வந்தார்.

நாளுக்கு நாள் அவர்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் விதி விஜயாவின் வாழ்க்கையில் விளையாடியது. அவருக்கு திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்பக புற்று நோய் ஏற்பட்டது. வாழ்க்கையில் இடி விழுந்தது போல் விஜயா நிலை குலைந்தார். எனது குழந்தைகளை எப்படி நான் காப்பாற்றுவேன்? வேலைக்கு எப்படி செல்வேன்? என கண்ணீர் வடித்தார். ஆனாலும் குழந்தைகளை படிக்க வைக்க வசதி இல்லாததால் தனது மகள் காளீஸ்வரியை மட்டும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்து விட்டார். சிறுவர்கள் 2 பேரையும் வேலைக்கு அனுப்பி விட்டார். இதனிடையே விஜயாவுக்கு புற்று நோய் நாளுக்கு நாள் முற்றிப் போனது. எனவே அவர் படுத்த படுக்கையானார்.

தாயின் நிலையை கண்ட 2 சிறுவர்களும் நிலை குலைந்தனர். உறவினர்களிடம் எனது அம்மாவை காப்பாற்றுங்கள் என்று பணம் கேட்டு கெஞ்சினர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

யாரும் இவர்களுக்கு உதவ முன் வரவில்லை. எனினும் 2 சிறுவர்களும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி விஜயா பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்களான மோகன், வேல்முருகன் கதறி அழுதனர். இவர்களது அழுகுரல் கேட்டு வார்டுகளில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் திரண்டனர். அடுத்து என்ன செய்வது என்று கைகளை பிசைந்தபடி நிலை குலைந்து நின்றார்கள்.

அப்போது ஒரு சிலர் யாராவது உங்களுக்கு சொந்தக்காரர்கள் இருந்தால் நீங்கள் தெரிவியுங்கள் என்று கூறினார். உடனே அந்த சிறுவர்கள் அங்கிருந்தவர்களின் செல்போன்களை வாங்கி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் வருவதாக இல்லை.இதனால் கண்ணீர் வடித்த 2 சிறுவர்களும் தனது தாயாரின் உடலை அடக்கம் செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரி வார்டுகளில் இருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் ஆகியோரிடம் பிச்சை எடுப்பது என முடிவு செய்தனர். அதன்படி ஆஸ்பத்திரியில் உள்ளவர்களிடம் 2 சிறுவர்களும் கண்ணீர் மல்க எங்கள் அம்மாவை அடக்கம் செய்ய வேண்டும். கொஞ்சம் பணம் இருந்தால் கொடுங்கள் என்று கண்ணீரும் கம்பலையுமாக கேட்டனர்.

மனம் இறங்கிய பலர் அந்த சிறுவர்களுக்கு தங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தனர். தகவல் அறிந்த ஆஸ்பத்திரி நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் நேரில் வந்து அவரும் சிறுவர்களுக்கு உதவினார். அதன் பின்னர் அவரது உத்தரவின் பேரில் விஜயாவின் உடல் திண்டுக்கல் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் காண்போர் நெஞ்சை கண்கலங்க வைத்தது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*