லஞ்ச விவகாரம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் வழக்கு விசாரணை

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிட நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக துணைவேந்தர் கணபதி, அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜன் ஆகியோர் கடந்த 3-ஆம்தேதி கோவை லஞ்ச ஒழிப்பு துறை காவலர்களால் கைது செய்யப்பட்டனர். இதன்பின், பல்கலைகழகம் மற்றும் கணபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைகழகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ராஜேஷ் தலைமையிலான காவலர்கள் நேற்று 3-ஆவது முறையாக சோதனை நடத்தினர்.

9 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் துணைவேந்தர் அறை மற்றும் பதிவாளர் அறையில் அதிகாரிகள் நேற்று பிற்பகலில் இருந்து சோதனை நடத்தினர். துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் சுல்தான் மற்றும் பதிவாளரின் உதவியாளர்கள் ராஜன், சங்கர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. துணைவேந்தரின் கணினியில் ரகசிய வார்த்தையை அவர்கள் தெரிவித்திருந்ததை தொடர்ந்து கணினி ஆராயப்பட்டது. பணி நியமனம் தொடர்பான ஆவணங்கள், நிர்வாக செலவினங்கள் குறித்த ஆவணங்கள், பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் கொடுத்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கணினியில் பதிவேற்றம் செய்தது குறித்து உதவியாளர்களிடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் உண்மையான விளம்பர கட்டணங்கள் மறைத்து போலி ரசீதுகள் ஆவணப்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் பல்கலைகழகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவது, டெண்டர் விடப்பட்டது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது அணைத்து ஆவணங்களையும் நகல் எடுத்த போலீசார் அதனை கட்டுகட்டாக எடுத்து சென்றனர். இதனிடையே கணபதியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*