சட்டமன்றத்தில் ஜெ படம்:ஸ்டாலின் எதிர்ப்பு..!

தமிழக சட்டப்பேரவையில், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா படம் வருகிற 12ந்தேதி திறந்து வைக்கப்படுகிறது. இதனை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. செயல் தலைவரான மு.க. ஸ்டாலின், ஜெயலலிதா படம் சட்டப்பேரவையில் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்பொழுது, ஊழல் குற்றவாளியின் படத்தினை திறப்பதற்கு சபாநாயகருக்கு எந்த அதிகாரமும், உரிமையும் கிடையாது. ஜெயலலிதா படத்தினை திறந்து வைத்து சட்டப்பேரவையின் மாண்பை குலைக்க கூடாது என கூறியுள்ளார்.அவர் தொடர்ந்து, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தினை திறப்பது கண்டனத்திற்குரியது. அவைக்கு ஒவ்வாத சொற்களை நீக்கும் சபாநாயகர் ஊழல் குற்றவாளியின் படத்தினை திறப்பது மிகப்பெரும் இழுக்கு என கூறினார்.

ஜெயலலிதாவின் படம் திறக்க கூடாது என்ற வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் அவசர கதியில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படம் திறப்பதில் தவறில்லை என பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பலமுறை முதல்வராக இருந்தவர் என்ற முறையில் அவரது படம் திறப்பது தவறில்லை என அவர் கூறியுள்ளார்.தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அவரது படம் திறப்பதில் தவறில்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*