ராமர்கோவில் சமரசத்திற்குச் சென்றவர் ராஜிநாமா..!

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரின் சமரச திட்டத்துக்கு உடன்பட்டு அவரை சந்தித்த மவுலானா சல்மான் ஹுசைன் நட்வி அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய ஒரு பகுதி நிலம் அக்ஷரா பரிஷத்துக்கும், மற்றொரு பகுதி நிலம் ராமர் கோவில் கட்டுமான கமிட்டிக்கும், மீதமுள்ள பகுதி முஸ்லிம் அமைப்புக்கும் சொந்தம் என அந்த தீர்ப்பு கூறியது.
எனினும், இந்த தீர்ப்பால் அக்ஷரா பரிஷத் தலைவர் துறவி ஞானதாசும், முஸ்லிம்களும் திருப்தியடையவில்லை. கோர்ட்டுக்கு வெளியே இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காண அயோத்தி முஸ்லிம் அமைப்பின் தலைவரான ஹாஷிம் அன்சாரியும் ஞானதாசும் முயற்சி செய்தனர்.
இந்த முயற்சி பலன் அளிக்காததால் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஹாஷிம் அன்சாரி, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2010-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தார். பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் மனுதாரராக உயிருடன் வாழ்ந்துவந்த ஒரேநபரான ஹாஷிம் அன்சாரி கடந்த 20-7-2016 அன்று மரணம் அடைந்தார்.
இதற்கிடையே, பாபர் மசூதி பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்துக்கு வெளியே சமரச தீர்வு ஒன்றை ஏற்படுத்தும் யோசனையை வாழுங்கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வெளியிட்டார். வழக்காடிவரும் இருதரப்பினரும் ஒன்றாக அமர்ந்துப் பேசி சமரசம் செய்து கொள்ள அவர் ஏற்பாடு செய்து வருகிறார்.

கடந்த நவம்பர் மாதம் லக்னோ மற்றும் அயோத்தியா நகரங்களுக்கு சென்ற அவர், இருதரப்பினரையும் சந்தித்து தனது ஆவலை வெளிப்படுத்தினார்.அவரது யோசனைப்படி, தற்போது சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து பைஸாபாத் பகுதியில் புதிய மசூதி அமைக்கவும், இந்து அமைப்புகள் உரிமை கோரிவரும் வாரணாசி, மதுரா உள்ளிட்ட பகுதிகளில் அமைத்துள்ள சுமார் 400 மசூதிகள் முஸ்லிம்களின்  கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, அடுத்தகட்ட ஆலோசனைக்காக அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர் மவுலானா சல்மான் ஹுசைன் நட்வி உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்கள் பெங்களூரு நகரில் கடந்த 8-ம் தேதி ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரை சந்தித்தனர். அப்போது, வரும் 20-ம் தேதி இருதரப்பினரும் நேருக்குநேர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக ஐதராபாத் நகரில் நடைபெற்றுவரும் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஆலோசனை கூட்டத்தில் ஒருமுறை கட்டப்பட்ட மசூதி உலகின் அழிவுக்காலம் வரை நீடிக்கும். எனவே, பாபர் மசூதி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தின் முதல்நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரை சந்தித்த செயற்குழு உறுப்பினர் மவுலானா சல்மான் ஹுசைன் நட்வி கலந்து கொண்டார். பாபர் மசூதிக்காக நாம் சட்டப் போராட்டம் நடத்திவரும் இடத்துக்கு பதிலாக வேறொரு இடத்தில் மிக பிரமாண்டமான மசூதி ஒன்றை கட்டி, அதில் பல்கலைக்கழகம் ஒன்றையும் அமைக்கலாம் என மவுலானா சல்மான் ஹுசைன் நட்வி கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை மற்றவர்கள் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகப் போவதாக மவுலானா சல்மான் ஹுசைன் நட்வி தெரிவித்துள்ளார். நேற்றும் இன்றும் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மவுலானா சல்மான் ஹுசைன் நட்வி-யின் முடிவு ஏற்றிக்கொள்ளப்பட்டதாகவும், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் டுவிட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*