’ஜெ’ படம் சட்டமன்றத்தின் புனிதம் கெட்டு விட்டது:ராமதாஸ் காட்டம்…!

ஈரோட்டில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபையில் இன்று ஊழல் குற்றவாளி ஜெயலலிதா உருவ படத்தை அவசர அவசரமாக திறந்துள்ளனர். உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இன்று விசாரணை நடைபெற உள்ளது. அதற்குள் அவசர அவசரமாக திறந்துள்ளனர். இன்று ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்திருப்பார்.ஊழல் செய்ததற்காக அவர் 2 முறை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். மேலும் 2 முறை சிறைக்கும் சென்றுள்ளார். ஊழலின் மொத்த உருவமாக இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்தை சட்டபையில் திறந்து வைத்தது ஏற்புடையது அல்ல. அதனை பா.ம.க. கண்டிக்கிறது.சட்டசபையில் காந்தி, அம்பேத்கார், பெரியார், ராஜாஜி, திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் படம் இடம் பெற்றுள்ளது. அப்படி இருக்கும்போது ஜெயலலிதா படத்தை அங்கு வைத்ததால் சட்டசபையின் புனிதம் கெட்டு விட்டது.

ஒன்று ஜெயலலிதா படத்தை அங்கு இருந்து அகற்ற வேண்டும் இல்லா விட்டால் அந்த தலைவர்கள் படத்தை அகற்றுங்கள். அவர்களது படத்துடன் ஜெயலலிதா படம் இருக்கக் கூடாது.

தமிழ்நாட்டின் பெருமைக்கு குந்தகம்விளைவிக்கும் வகையில் பினாமி எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. 25 வகை ஊழல் குறித்து ஆளுனரிடம் நாங்கள் மனு கொடுத்து உள்ளோம். ஆனால் நடவ டிக்கை இல்லை. நினைவூட்டும் கடிதம் ஆளுனருக்கு அனுப்ப உள்ளோம்.அவரை சந்தித்து பேசவும் உள்ளோம்.பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் கணபதி சிக்கியதால் பல் கலைக்கழகம் என்றாலே ஊழல் என்றாகிவிட்டது.

சமீபத்தில் கூட பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் முன்னாள் துணை வேந்தர் சுவாமிநாதனுக்கு பேராசிரியர் நியமனத்துக்காக பலரிடம் பணம் வாங்கி கொடுத்ததாக கூறி உள்ளார். ஆனால் இதுவரை சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எப்.ஐ.ஆரும் போடவில்லை. இதற்கு முக்கிய காரணம் என்ன வென்றால் அவ்வாறு அவரிடம் முறைப்படி விசாரணை நடத்தினால் முன்னாள், இன்னாள் கல்வி அமைச்சர்கள் சிக்குவார்கள் என்பதுதான்.இன்னும் பல பல்கலைக் கழகங்களில் ஊழல் நடக்கிறது. எனவே பல்கலைக் கழக ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.மத்தியஅரசு 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் போவதாக கூறி இருந்தது. அதன்படி தமிழகத்தில் 5 இடங்களில் அமையும் என்றும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதற்காக செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை, பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை கட்டுமான பணிகள் நடக்கவில்லை.

மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது.பஞ்சாப், இமாசல பிரதேச மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வாகி பணிகள் நடந்து வருகிறது. எனவே மத்திய அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமையல் கியாஸ் லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.தி.மு.க., அ.தி.மு.க. தவிர பா.ம.க. தலைமையை ஏற்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி ஏற்க தயார்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர்கள் பொ.வை.ஆறுமுகம், வேலுசாமி, மாநில துணை தலைவர்கள் வடிவேலு, எஸ்.எல். பரமசிவம், மத்திய மாவட்டசெயலாளர் கிருபாகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மாநகர் மாவட்ட செயலாளர் அருள்மொழி உள்பட பலர் உடன் இருந்தனர்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*