”வருமானவரி அதிகாரியாக மாதவனே நடிக்கச் சொன்னார்”- போலி அதிகாரி வாக்குமூலம்..!

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டில்  போலி வருமானவரி அதிகாரியாக நடித்த பிரபாகரன் போலீசில் சரணடைந்தார். அவர் அளித்துள்ள பரபரப்பான வீடியோ வாக்குமூலம் வருமாறு:-
எம்.பி.ஏ. படித்துள்ள நான் தாம்பரத்தில் இளநிலை பட்டம் படித்தேன். முதுநிலை படிப்பை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்தேன். ஓட்டல் தொழில் நடத்தி வருகிறேன்.புதுவையில் கடை வைத் துள்ளேன். 4 மாதங்களுக்கு முன்பு மாதவன் எங்கள் கடைக்கு வந்தார். முதலில் அவரை அடையாளம் காணமுடியவில்லை. 10 நிமிடம் கழித்தே வந்திருப் பது மாதவன்தான் என்பதை கண்டுபிடித்தோம்.

உடனே அவரை நன்றாக உபசரித்தோம். அப்போது அவர் என்னை பார்த்து நன்றாக வாட்டம் சாட்டமாக இருக்கிறீர்களே, படத்தில் ஏதும் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். இல்ல சார் அதுமாதிரி எல்லாம் ஆசை இல்லை என்று நான் கூறினேன். நடிப்பதாக இருந்தால் சொல்லுங்கள். அடுத்த முறை நான் வரும்போது போட்டோ கொடுங்கள். நான் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

இதுபற்றி நான் எனது வீட்டில் எதுவும் கூறவில்லை. நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே முயற்சி செய்தபோது வீட்டில் அது தேவையில்லாத வேலை என்று கூறி இருந்தனர். அதனால் நான் சொல்லவில்லை. இதன் பின்னர் 2 மாதம் கழித்து மீண்டும் ஓட்டலுக்கு வந்த அவர், சினிமாவில் நடிப்பது பற்றி கேட்டிருந்தேனே? போட்டோ இருந்தால் கொடுங்கள் என்று அவரே ஒரு போட்டோவை வாங்கி சென்றார்.15 நாட்களுக்கு முன்பு என்னிடம் போனில் பேசிய அவர் நான் உனக்கு கொரியர் அனுப்புகிறேன். இதில் வருமான வரி அதிகாரியாக நீ நடிக்க வேண்டியது இருக்கும். நான் சொல்லும்போது நீ வா என்று கூறினார். அதன் பின்னர் கொரியர் வந்தது. வேறு பெயரில் வந்தது. அதில் அடையாள அட்டை இருந்தது. டைரக்டர் ஒருவரின் பெயர் போட்டு அனுப்பப்பட்டிருந்தது.

3 நாளுக்கு முன்பு போன் செய்து, சென்னைக்கு வரவேண்டியது இருக்கிறதா? என்று கேட்டார். நான் 10-ந்தேதி ஒரு பிறந்தநாள் விழாவுக்கு வர வேண்டியது உள்ளது என்று கூறினேன். வரும் போது வீட்டுக்கு வா. அங்கு வைத்து பேசிக்கொள் வோம் என்று கூறினார்.

இதன்படி நான் மாம்பலம் சென்று போன் செய்தேன். வீட்டில் பாதுகாவலர்கள் உள்ளனர். வருமான வரி அதிகாரி என்று கூறிவிட்டு உள்ளே வா என்று கூறினார். அவர் சொன்னபடி சென்றேன். நான் உள்ளே சென்ற போது ஒரு கார் வெளியில் சென்றது. தீபாதான் வெளி யில் செல்கிறார் என்று நான் நினைத்து கொண்டேன்.எதுக்கு சார் இதெல்லாம் என்று கேட்டேன். இது ஒரு ஒத்திகைதான் என்று கூறினார். அப்போதெல்லாம் எனக்கு தெரியாது, சீட்டிங் (மோசடி) நடக்கப் போகிறது என்று.

சோதனை நடத்துவதற்கான வாரண்டு பேப்பர் ஒன்றையும் என்னிடம் கொடுத்தார். இது எதற்கு என்றபோது சொல்கிறேன். கையில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.பின்னர் தீபாவுக்கு போன் செய்து வருமான வரித்துறையில் இருந்து வந்திருக்கிறார்கள். உன்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று கூறினார். ஏன் சார் இப்படி பண்றீங்க? என்று கேட்டபோது போனை என்னிடம் கொடுத்து மிரட்டுவது போல பேச சொன்னார். நான் பார்க்கணும், நீ மிரட்டு என்று கூறினார்.

அதன்பின்னர் தீபாவுக்கு நானே போன் செய்து பேசினேன். மேடம் வருமான வரி துறையில் இருந்து வந்துள்ளோம். 15 நிமிடத்தில் நீங்கள் இங்கே வரவேண்டும் என்று கூறினேன். அப்போதும் மாதவன் கேசுவலாக பேசிக் கொண்டே இருந்தார்.அந்த நேரத்தில் திடீரென வக்கீல் ஒருவர் வந்தார். தீபா மேடம் போன் செய்து வரச்சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தேன். வக்கீல் வந்ததும் எனக்கு பதட்டமாகி விட்டது. வக்கீலிடம் வருமான வரி அதிகாரி என்றே பேசச் சொன்னார். திடீரென மீடியா வந்ததும் பயந்து விட்டேன்.

என்ன சார் நடக்கிறது? எதற்கு வரச் சொன்னீர்கள்? என்று கேட்டேன். உடனே அருகில் உள்ள சேரை காட்டி இதில் ஏறி தப்பிச் சென்று விடு என்று கூறினார். போலீசும் அங்கு வந்ததால் நான் ஏறி குதித்து ஓடிவிட்டேன். வேகமாக ஆட்டோவில் ஏறி நுங்கம்பாக்கம் வந்து அங்கிருந்து நங்கநல்லூர் சென்றேன். அங்கு ஒரு பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு ஊருக்கு சென்று விட்டேன்.

போலீசார் என்னை போட்டோ எடுத்தனர். நான் வெளியே வந்து அடையாள அட்டை, வாரண்டு எல்லா வற்றையும் கிழித்துப் போட்டு விட்டேன். வீட்டுக்கு சென்று பார்த்த போதுதான் நான் பிரச்சினையில் மாட்டிக் கொண்டதை உணர்ந்தேன். இதுபற்றி எனது வீட்டில் சொன்னேன். குற்ற உணர்ச்சியும் இருந்து கொண்டே இருந்தது. என்னை வைத்து மாதவன், தீபாவிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார் என்பதையும் உணர்ந்து கொண்டேன். இதன் பின்னரே சரண் அடைந்துள்ளேன். இவ்வாறு போலி அதி காரி பிரபாகரன் கூறி உள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*