ஸ்டாலின் தொண்டர்களுக்கு பிறந்த நாள் கடிதம்..!

மதுரையில் 2 ரவுடிகளை என் கவுண்டர் செய்த போலீஸ்..!

சிதம்பரத்தை குறி வைக்கும் சிபிஐ :அரசியல் பழிவாங்கல்?

ஸ்டாலினை கண்ணின் இமை போல காப்பேன் :வைகோ

ஓட்டுநர் கொலையா :அமைச்சர் பதில் சொல்ல முடியாமல் திணறல்..!

நெஞ்சுவலியால் துடித்த டிரைவரை டுவீலரில் அனுப்பிய அமைச்சர்: சாலையில் விழுந்து பரிதாப மரணம்..!

என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் கோரிக்கை மடல்.

மார்ச்-1ந் தேதி பிறப்பது, தலைவர் கலைஞர் அவர்களிடமும் அன்னையார் தயாளு அம்மாள் அவர்களின் வாழ்த்துகளுடன் தான் தொடங்கும். என்னை ஈன்றவர்கள் என்பதால் மட்டுமல்ல, என்னை இந்த இயக்கத்திற்கு வாழும்நாள் வரை உழைத்திடத் தந்தவர்கள் என்பதாலும்தான். அதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை என்றென்றும் வழிநடத்தும்- மறைந்தும் மறையாத மாபெரும் தலைவர்களான தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி, இந்த இயக்கத்தின் வேர்களாகவும் விழுதுகளாகவும் இருந்து ஆலமரமாக வளர்த்து தாங்கிநிற்கும் பல நூறு கழக நிர்வாகிகள் முதல் இலட்சோப லட்சம் கடைக்கோடித் தொண்டர்கள் வரை அனைவருடைய அன்பான வாழ்த்துகளைப் பெறும் போது கிடைத்துக் கரைபுரண்டோடும் உற்சாகம் என்பது, இயக்கம் காக்கும் ஈடற்ற பணியைச் சிறிதும் துவண்டு விடாமல் தொடர்ந்து மேற்கொள்ளும் ஊக்கத்தினை ஊற்றெனப் பெருக்கி வாரி வழங்குகிறது.

கடந்த ஆண்டு பிறந்த நாளின் போது கழகத் தொண்டர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள் விடுத்தேன். சால்வைகள், மாலைகள் இவற்றிற்குப் பதிலாகப் புத்தகங்களைப் பரிசளிக்கும்படி நான் விடுத்த கோரிக்கையை, உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொண்டு கழகத்தினர் பரிசளித்த புத்தகங்கள் மலை போல் குவிந்து வருகின்றன. அதனைத் தமிழகத்தின் பல பகுதிகளிலும்-தமிழர்கள் வாழும் அயல்நாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு வழங்கி, அறிவுப் பசிக்கு விருந்து வைக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்று வருகின்றேன். இந்த ஆண்டு பிறந்தநாளிலும் உங்களுக்காக அன்புக் கோரிக்கைகள் என்னிடம் இருக்கின்றன. கழகத்தினர் மாவட்ட தலைமை அலுவலகங்கள் தோறும் நூலகங்கள் உருவாக்கப்பட்டு அவற்றிக்கு புத்தகங்கள் வழங்க பெற்று இளைஞர்களும்,மாணவ மாணவியரும்,பொதுமக்களும் பயனடைந்து வருகின்றனர்.

மாவட்ட தலைமை கழக நூலங்கள் போலவே கழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் படிப்பகங்களை உருவாக்கி அவற்றிக்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமான பேராசிரியர் ஆகிய தலைவர்களின் பெயர்களை சூட்டி பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் செயல்படுத்திட வேண்டும். எனக்கு பரிசாக வரும் புத்தகங்களை இந்த படிப்பகங்களுக்கு தொடர்ந்து வழங்குவேன். அத்துடன் கழக நிர்வாகிகளும் படிப்பக வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கழக வளர்ச்சிக்காக நான் மேற்கொள்ளும் வெளியூர் பயனங்களில் போது இந்த படிப்பகங்களை பார்வையிட நான் இப்போதே ஆர்வமாக உள்ளேன். கழகத்தினர் என் ஆர்வத்தை நிறைவு செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பிறந்த நாளில் மேலும் ஒரு கோரிக்கை உங்களுக்கு உள்ளது.

நூறாண்டு கடந்த பேரியக்கமான திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் சமூகநீதி-இனமானம்-பகுத்தறிவு-மூடநம்பிக்கை ஒழிப்பு- சாதி, மத பேதம் நீக்கல்-சுயமரியாதை- மொழியுணர்வு-மதச்சார்பற்ற தன்மை உள்ளிட்ட ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சோஷலிச சமுதாயம் அமைவதற்கான கொள்கைகளேயாகும். அந்தக் கொள்கைகளுக்கு இந்திய அளவில் சவால் விடுக்கும் வகையில் மத்தியில் ஓர் ஆட்சியும், அந்த ஆட்சி சர்வாதிகார ரீதியில் காலால் இடும் கட்டளைகளை கொத்தடிமைகளைப்போல தலை மேல் சுமந்து நிறைவேற்றும் வகையில் மாநிலத்தில் ஓர் ஆட்சியும் நடைபெறுவதால், திராவிட இயக்கத்தின் கொள்கைகளைக் கட்டிக் காப்பதன் மூலம், மாநில அளவிலும் தேசிய அளவிலும் சமத்துவ சமுதாயம் மலர்வதற்கான பெரும் பணியைப் போராடி நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. எந்தத் தடைவரினும் அதனைத் தகர்த்து அந்தப் பணியை முன்னெடுக்கவும், ஒருங்கிணைக்கவும், பரவலாக்கவும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தலையாய பொறுப்பும் கடமையும் இருக்கிறது.

இந்தக் கொள்கை வழிப் பயணத்தில் தி.மு.கழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் பணியை மேற்கொள்வதுடன், மக்கள் பெருந்திரளை அதில் இணைத்து செயல்படுவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். திராவிட இயக்கம் என்பது எப்போதுமே மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் போராடி நிலைநாட்டுகிற இயக்கம். அதனை மக்களின் தன்னெழுச்சியான பங்கேற்புடன் வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டிய இயக்கம். நமக்கெல்லாம் முன்னோடிகளாக விளங்கிய நீதிக்கட்சித் தலைவர்களில் தொடங்கி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமான பேராசிரியர் என அனைவருடைய பொதுவாழ்வுப் போராட்ட வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், எந்த மக்களுக்காக அவர்கள் பாடுபட்டார்களோ அந்த மக்களின் மனதில் தங்கள் கொள்கைகளைப் பதியவைத்து, அரசியல்-பண்பாட்டு மாற்றத்தினை உருவாக்கி அதன் வாயிலாக திராவிட இயக்கத்தின் கொள்கைகளை சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றத் துணை நின்றதை அறிய முடியும்.

தலைவர்கள் கற்றுத் தந்த பாதை-பயணம் ஆகியவற்றின் அடிப்படை அறிந்து, நாம் அனைவரும் செயல்பட வேண்டிய காலம் இது. திராவிட இயக்கத்தின் ஆணிவேர்க் கொள்கைகளுக்கு சவாலும் நெருக்கடியும் மத்திய-மாநில ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், மக்களிடம் சுயமரியாதை-சமூகநீதி-இன,மொழியுணர்வுக் கொள்கைகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து அவற்றைப் பாதுகாத்திடவும் பரப்பிடவும் வேண்டிய அதிமுக்கியக் கடமை கழகத்தினர் ஒவ்வொருவருக்கும் உள்ளது. திராவிட இயக்கம் நிலைநாட்டிய சுயமரியாதை உணர்வினாலும் சமூக நீதிக் கொள்கைகளாலும் சமுதாயத்திலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முந்தைய தலைமுறைகளைவிட மேம்பாடு அடைந்துள்ள இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள அனைவரிடமும் நம்முடைய கொள்கைகளை நினைவூட்டி, அதன் காரணமாகத்தான் இன்றைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டிட வேண்டும். அதற்கு திண்ணைப் பிரச்சாரமும் தெருமுனைக் கூட்டங்களுமே பெரிதும் துணை நிற்கும்.

தெருவோரங்களிலும், வீட்டு வாசல்களிலும், தேநீர்க் கடைகளிலும், முடி திருத்தும் நிலையங்களிலும், பேருந்து- தொடர்வண்டி நிலையங்களிலும் மேற்கொண்ட பிரச்சாரங்கள்தான் திராவிட முன்னேற்றக்கழகம் எவராலும் அசைக்கமுடியாத, வலுவான அடித்தளத்துடன் உயர்ந்து நிற்கக் காரணமாக அமைந்தது. அதே வழியில் இன்றைய சூழலுக்கேற்பவும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கேற்பவும் பிரச்சார முறைகளைக் கையாண்டு, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றைத் தேவையான அளவுக்கு இணைத்து ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைக் கொண்டு சேர்த்து, அவர்கள் அதனைப் புரிந்துகொண்டு நம் பக்கம் மேலும் உறுதியாக நிற்கின்ற வகையில் கழகத்தினரின் பிரச்சாரம் அமைய வேண்டும். அதற்கு கழகத்தினர் அமைக்கவிருக்கும் நூலகங்களும்,படிப்பகங்களும் பெரிதும் பயன்பட வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தின் வேர்களுக்கும் திராவிட இயக்கக் கொள்கைகளே நீராக அமைந்திடும். அதன் மூலமாக, திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகம் மேலும் மேலும் வலுப்பெற்று ,மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சியை மக்களின் துணையுடனேயே விரட்டியடிக்கும் பேராற்றல் உருவாகும். அதற்கான பணியை இன்றே தொடங்கிடவேண்டும் என்பதுதான் எனது பிறந்தநாள் கோரிக்கை. கொள்கைப் பிரச்சாரத்தால் மக்களின் மனங்களில் உயிரோவியமாய் நின்று நிலைத்திருப்பதையே பிறந்தநாளின் சிறந்த பரிசாகக் கருதுகிறேன்!

தமிழ் மக்கள் நெஞ்சங்களில் திராவிட இயக்கக் கொள்கைகளையும், அதன் போராட்ட வரலாற்றையும், கழக ஆட்சியில் சமூக மேம்பாட்டுக்காக நிறைவேற்றப்பட்ட சட்ட திட்டங்களின் பின்னணிச் சிறப்பினையும் விதைத்திடுவோம்; விழிப்போடு நாளும் வளர்த்திடுவோம்!

அன்புடன்,

மு.க.ஸ்டாலின்.
திருவள்ளுவர் ஆண்டு 2049 – மாசி 18.
01-03-2018.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*