“கண்ணியமான ஒரு மரணம் தொடர்பான பிரச்சனை” -அ.மார்க்ஸ்

காவிரி விவகாரம்:மோடி கைவிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுடன் சந்திப்பு!
செங்கல்பட்டு – பாலேஸ்வரம்- இறக்கும் தருவாயில் உள்ள முதியோர்களுக்கான இல்லம் தொடர்பான பிரச்சினை குறித்த அறிக்கை தயாரிப்பு நடந்து கொண்டுள்ளது. வழக்கமாக ஆய்வை முடித்த அன்றே இரவில் அறிக்கையை எழுதி, அடுத்த நாள் பத்திரிகையாளர்கள் முன் அதை வெளியிடுவது வழக்கம். ஆனால் இம்முறை பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கே நிறைய தகவல்களைத் திரட்டவும், படிக்கவும் வேண்டியுள்ளது.

சுமாராகச் சொல்வதானால் சாகிற மக்களுள் குறைந்த பட்சம் 1 சதம் பேர்களாவது அனாதைகளாக யாரும் இன்றி, இறுதி நேர உதவிகளின்றிச் சாகிறார்கள். அவர்களது உடலை dispose பண்ணவும் யாரும் இருப்பதில்லை. இது குறித்து தெளிவான சட்டங்கள் எதுவும் நம் அரசுகளிடம் இல்லை. அதே நேரத்தில் இந்த மாதிரிப் பணிகளைக் கைகழுவி NGO க்களிடம் ஒப்படைப்பது என்பதை அரசு இப்போது கொள்கையாகக் கொண்டுள்ளது.

அனாதையாக வந்து ‘அட்மிட் ஆகிச் சாகும் நிலையில் உள்ளவர்களை அரசு மருத்துவமனை நிர்வாகங்களும் எப்படியாவது கைகழுவவே முனைகின்றன. தங்கள் மருத்துவமனையில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகக் கூடாது என்பதில்தான் அவர்கள் குறியாக உள்ளனர். இப்படியான NGO நிறுவனங்களிடம் ஒரு ‘மெமோ’ எழுதித் தந்து பிரச்சினையைக் கைகழுவி விடுகின்றனர். சாலையில் அநாதையாகச் செத்துக் கொண்டிருப்போரை போலீஸ்காரர்கள் இப்படி ஒரு ‘மெமோ’ எழுதி வைத்துக் கொண்டு இவர்களை வரவழைத்து அவர்கள் வசம் பிரச்சினையை ஒப்படைத்து நழுவிக் கொள்கிறார்கள்.

இவர்கள் NGO க்கள்தானே, பணம் இருக்கும்தானே, கொடுக்கட்டுமே என்றுதான் அரசாங்கத்தின் ஒவ்வொரு தூணும் துரும்பும் நினைக்கிறது. இப்படியான முதியோர் இல்லம் நடத்துகிற நண்பர் ஒருவரைத் தேடிப் பிடித்துப் பேசினோம். கட்டிடங்களுக்கு Stability Certificate, Fire Licence, Sanitary License எல்லாம் வாங்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் காசு. இறந்தவர்களை தாங்கள் இல்லம் நடத்தும் பகுதியில் புதைக்க அந்த ஊர் இடுகாட்டில் அனுமதி இல்லை என்கிறார் அந்த நண்பர். அந்த ஊரில் சொத்து உள்ளவர்களுக்குத்தான் அங்கு புதைக்க அல்லது எரிக்க அனுமதியாம். எனவே இப்போது ஒரு புறம்போக்கு நிலத்தில்தான் இறந்த உடல்களை dispose செய்கிறார்களாம். அரசாங்கத்தின் அங்கங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், அனுமதித்துக் கொண்டும்தான் இருக்கிறது.

ஆனால் பிரச்சினை என எதுவும் வந்தால் அதே அரசாங்கம் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கிறது. இதைவிட ஒரு கொடுமை என்ன இருக்க முடியும்?

யாருமற்றவர்களான முதியவர்களின் பொறுப்பை அரசுதான் ஏற்க வேண்டும். முதியோர் பென்ஷன் தொகையை 1000 என்பதிலிருந்து குறைந்த பட்சம் 5,000 ஆக்க வேண்டும். ஒவ்வொரு அரசு மருத்துவ மனையிலும் முதியோர்களுக்கும், terminally ill persons களுக்குமான தனி வார்டுகள் அமைக்க வேண்டும். வேண்டும், வேண்டும்…..

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இது முதியோர் இல்லம் தொடர்பான பிரச்சினை அல்ல. சாகும் தறுவாயில் உள்ளவர்களின் கண்ணியமான ஒரு மரணத்திற்கு சமகாலச் சமூகம் பொறுப்பேற்பது தொடர்பான பிரச்சினை…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*