இந்திய அரசு தமிழகத்தின் மீது நடத்திக் கொண்டிருப்பது நீர் முற்றுகை:பேராசிரியர் த.செயராமன்

தமிழக பல்கலையில் கர்நாடக சூரப்பா:பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்!

துணைவேந்தர் பதவி: புஷ்பவனம் குப்புசாமி சாதியால் வீழ்த்தப்பட்ட கதை..!

அண்ணா பல்கலையில் கன்னட துணை வேந்தர்: தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட அவலம்!

சல்மான்கான் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு!

12-ஆம் கர்நாடகத்தில் பந்த் அறிவிப்பு!

ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரம் பேர் பேரணி முடங்கியது சென்னை!

காவிரி உரிமை நீருக்கான தமிழகத்தின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழகத்துக்குக் காவிரி நீரைத் தொடர்ந்து மறுத்த கர்நாடகம் இப்போதும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கிறது. கர்நாடகம் அனுமதித்தாலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும், அப்படி ஒரு மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகத்துக்கு ஆற்றுநீர் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த இந்திய அரசு தயாரில்லை.

கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி காவிரி மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பை வழங்கியது. 2007-ம் ஆண்டில் வழங்கிய இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி. நீர் மட்டுமே தமிழகத்தின் பங்கு என்று குறைத்து உத்தரவிட்டது தீர்ப்பாயம். இதை எதிர்த்து உச்சநீதி மன்றம் சென்றது தமிழகம். இப்போது இந்த அளவை மேலும் குறைத்து 177.25 டி.எம்.சி.தான் தமிழகத்தின் பங்கு என்று தீர்ப்பை வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றம் 192 டி.எம்.சி.யில் 14.75 டி.எம்.சியை எடுத்துக் கர்நாடகத்துக்கு, பெங்களுரின் நீர்த்தேவைக்கு என்று வழங்கியுள்ளது. இப்படிக் குறைத்து வழங்கப்பட்ட நீரையாவது உத்தரவாதப்படுத்திக் கொள்ள தமிழகம் விரும்புகிறது. தமிழகத்தின் நிலத்தடி நீர் இருப்பு 20 டி.எம்.சி. என்றும் அதில் 10 டி.எம்.சி.யை தமிழகம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தனது தீர்ப்பில் கூறிய உச்சநீதி மன்றம், கர்நாடகத்தில் உள்ள நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

உலகத்தில் எந்த நாட்டிலும் நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதில்லை. இந்தியாவிலும் இதுவரை தீர்த்து வைக்கப்பட்ட எந்த ஆற்றுநீர்ச் சிக்கலிலும் நிலத்தடி நீர் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டதில்லை. தமிழகத்துக்கு மட்டும் ஆற்றுநீர்ப் பங்கைக் குறைப்பதற்கும் மறுப்பதற்கும் என்னென்ன வழிகள் உண்டோ அவ்வளவையும் இந்திய உச்சநீதி மன்றமும் இந்திய ஒன்றிய அரசும் கையாண்டிருக்கின்றன. உலகில் எந்த நாடாக இருந்தாலும் அந்நாட்டின் உறுப்பு மாநிலத்தின் உரிமை பாதிக்கப்பட்டால், அந்நாட்டின் அதிஉயர் நீதிமன்றத்தை நாடித் தன் உரிமையைப் பாதுகாத்துக் கொள்ளும். ஆனால் இந்திய ஒன்றியத்தில் தமிழகத்தின் உரிமையை மறுப்பதில் உச்சநீதி மன்றமும் இந்திய ஒன்றிய அரசும் சேர்ந்து செயல்படுகின்றன.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இந்திய அரசுக்கு 6 வார கால அவகாசத்தை உச்சநீதி மன்றம் அளித்தது. ஆனால் 6 வார காலம் முடிந்த பிறகு, தீர்ப்பில் நீர் வழங்குவதை உறுதி செய்ய அமைக்கச் சொல்லியிருக்கும் Scheme என்பது என்ன என்று இந்திய ஒன்றிய அரசு உச்சநீதி மன்றத்திடம் சந்தேகம் கேட்கிறது. உச்சநீதி மன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த இந்திய அரசு தவறிவிட்டது என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இந்திய அரசின் மீது தமிழக அரசு தொடுத்துள்ளது. இந்திய அரசின் சந்தேகம் கேட்கும் மனுவையும், தமிழக அரசு தொடுத்துள்ள நீதிமன்ற அமதிப்பு வழக்கையும் சேர்த்து, வருகிற 09-04-2018 அன்று உச்சநீதிமன்றம் விசாரிப்பதாகக் கூறியிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பலதரப்பினரும் களமிறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இறுதிவரை இழுத்தடிக்க விரும்புகிறது இந்திய அரசு.

தமிழகத்தின் உணவு உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் காவிரிப்படுகையைக் காயப்போடுவதிலும், தமிழகத்தின் உழவுச் சூழலைக் கெடுத்து, விவசாயத்தை நிறுத்தி, மக்களை ஏதிலிகளாகப் படுகையிலிருந்து வெளியேற்றுவதிலும் இந்திய அரசு குறியாக இருக்கிறது.

தமிழகத்தைவிட, கார்ப்பரேட்டுகளின் நலன்தான் இந்திய அரசுக்கு முக்கியம். காவிரிப்படுகையைக் கொத்திக் குதறி கனிமங்களைச் சூறையாடி, 25,000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ஒரு பெரிய பாலைவனமாகக் காவிரிப்படுகையை ஆக்குவதில் இந்திய அரசு குறியாக இருக்கிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கு தின்று தீர்க்க காவிரிப்படுகை மண்ணுக்குள் கனிம வளம் இறுகிக் கிடக்கிறது.

சில உண்மைகளை நாம் உணர்ந்தாக வேண்டும். இந்திய அரசின் இந்தப் போக்குக்கான காரணம், ஒன்று, கார்ப்பரேட்டுகளின் கனிமவளச் சூறைக்கு காவிரிப்படுகையைத் தயார் செய்வது, அதாவது, ஆற்றுநீர் கிடைக்காமல் விவசாயம் நின்றுபோய், படுகையே பாலையாக மாறும்போது, எண்ணெய்-எரிவாயு எடுப்பும், நிலக்கரி எடுப்பும் எந்தத் தடையுமின்றி நடந்தேறும்.

இரண்டாவதாக, ஆரிய இனவெறியை உள்ளடக்கிச் சனநாயக முகமூடி அணிந்திருக்கும் இந்தியாவுக்கு தமிழர்கள் மீது வரலாற்றுப் பகை உணர்வு இருக்கிறது. தமிழர்களின் வளமான வாழ்வை ஆரியம் ஏற்காது. அதன் இருப்பையே சிதைப்பதில் ஆரியம் குறியாக இருக்கும்.

இந்தியாவில் ஒன்றிய அரசைக் காங்கிரசு கட்சி அமைத்தாலும், பாரதீய ஜனதா கட்சி அமைத்தாலும் இரண்டும் ஒன்றுதான். அவர்களுக்குத் தமிழ் மீது, தமிழினத்தின் மீது, தமிழின் அடையாளத்தின் மீது நீண்ட காலப் பகையுணர்வு இருந்து வருகிறது. இதற்குக் காரணம், வேதத்தை, ஆரியத்தை, வருணாசிரமத்தை, சமஸ்கிருதத்தை அதன் வாழும் வடிவமான இந்தியை, பார்ப்பனீயத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து எதிர்க்கும் மண் தமிழ் மண். கூடுதலாக, இன்று தங்களை இந்தியராகவும், இந்துவாகவும் தமிழர்கள் தவறாகக் கருதிக் கொண்டாலும்கூட, தமிழ் அடையாளத்தைத் தமிழர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள். இந்திய தேசியம் என்பது குழப்பமான முறையில் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் கூட, இந்திய தேசியக் கட்சிகளைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எவ்வளவு ஊழல்காரர்களாக இருந்தாலும், இங்குள்ள திராவிடக் கட்சிகளும், உள்ளுர் கட்சிகளுமே தமிழர்களுக்கான தேர்தல் கட்சிகள். இந்திய தேசியக் கட்சிகள் வேர் பிடிக்க முடியாத மண் தமிழ்மண். ‘ஒரேநாடு’, ‘ஒரேகொடி’, ‘ஒரேபண்பாடு’ என்று இந்தியாவில் ஒற்றை அடையாளத்தை நிலைநிறுத்த விரும்பும் ஆரிய இனவெறி – இந்துமதவாத – வருணாசிரம – இந்திய தேசியக் கொடூரர்கள், தங்களுக்கு வசப்படாத தமிழகத்தை அழிப்பதில், அழியக் கொடுப்பதில், எவ்விதத் தயக்கமுமில்லாமல் களம் இறங்கியிருக்கிறார்கள். இதன் விளைவுதான், தமிழகத்தின் மீது திணிக்கப்படும் அடுக்கடுக்கானப் பேரழிவுத் திட்டங்கள். தமிழகத்தைத் தப்பிக்க விடுவதாக இல்லை அவர்கள்.

காவிரிப்பிரச்சினை என்பது வெறும் தண்ணீர்ப் பிரச்சினை அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் இனத்தின்மீது பகைமை பாராட்டி வந்திருக்கும் ஆரிய இனம் இப்போதும் தமிழகத்தின் மீது போர் நடத்திவருகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தத் திட்டங்கள், காவிரி நீர் மறுப்பு, கூடங்குளம் திணிப்பு, நியூட்ரினோ பேரழிப்பு வேலைகள். தமிழகத்தைப் பாலைநிலமாக்க இந்திய அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது. ஒரு புறம் காவிரி நீர் மறுப்பு, மறுபுறம் எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களின் பல்வேறு வடிவங்கள், கச்சா எண்ணெய்யும், கதிர் வீச்சுத் தனிமங்களும் கலந்து நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாதபடி பாழாக்குவது, நிலத்தடி நீரைச் சூறையாடி விடுவது, காவிரி ஆற்றையே ‘தேசிய மயம்’ என்ற பெயரில் தமிழ்நாட்டிடமிருந்துப் பிடுங்கிக் கொள்வது, மேற்கு மலைத்தொடரிலிருந்து பல ஆறுகள் தோன்றி கிழக்கு நோக்கிப் பாய்ந்து வளப்படுத்தும் நிலையில், அம்மலையின் கிழக்குப் பகுதியில் தமிழகத்தை அபாயத்தின் உச்சத்தில் வைக்கக் கூடிய நியூட்ரினோ ஆலையை அமைத்து அப்பகுதியை மழையற்றப் பகுதியாக மாற்றுவது -என்று தன் பேரழிப்புத் திட்டங்களைத் தமிழகத்தின் மீது ஏவுகிறது இந்திய அரசு.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று தன் தீர்ப்பை வழங்கி, அன்றிலிருந்து, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துத் தமிழகத்துக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ‘Scheme’ (ஓர் அமைப்பு) ஏற்படுத்தக் கூறியது. மார்ச் 29-ம் தேதி கெடு முடிவடைந்தது. ஆனால், தமிழ்நாட்டுக்குக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தேசமில்லை என்பதை அதற்கு முன்பே இந்திய அரசு தெளிவுபடுத்திவிட்டது. ஆனால், கடைசி நாள் வரைத் தமிழகத் தலைவர்கள் காத்துக் கிடந்தார்கள். மத்திய நீர் வளத்துறைச் செயலாளர் U.P.சிங் 21-03-2018 அன்று, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. அமைக்கும்படி உச்சநீதி மன்றம் கூறவில்லை. ஒரு திட்டம் என்றுதான் கூறியிருக்கிறது. அதை எப்படி செயல் படுத்துவது என்று ஆலோசித்து வருகிறோம். அனைத்து மாநிலங்களும் ஏற்கும் ஒரு திட்டத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார். அது மட்டுமின்றி, “காவிரித் தீர்ப்பாயம் தன் இறுதித்தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கும்படி கூறியிருப்பது கூட, ஒரு பரிந்துரைதான்” என்று கூறினார். தமிழகத்துக்குக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதை இதைவிட எப்படித் தெளிவாகக் கூற முடியும். ஆனாலும், தமிழ்நாட்டின் தலைவர்கள் 29-ம் தேதி முடியும் வரைக் காத்துக் கிடந்தார்கள்.

தமிழக அரசு இப்போது இந்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்து விட்டதாக வழக்குத் தொடுத்திருக்கிறது. இந்திய அரசோ ஏதுமறியா அப்பாவிபோல, ‘உச்சநீதிமன்றம் குறிப்பிடும் அந்த ஸ்கீம் என்பது என்ன?’ என்று விளக்கம் கேட்டிருக்கிறது. இரண்டையும் 09-04-2018 அன்று உச்சநீதிமன்றம் விசாரனைக்கு எடுத்துக் கொள்கிறது. உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறவில்லை. ஆனால், நீர் அளிப்பதை உறுதி செய்யும் ஒரு திட்டம் என்று 02-04-2018 அன்று நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியிருக்கிறார். இன்னமும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். காவிரி நீர்ப் பிரச்சினை என்பது ஓர் இனப்பிரச்சினையாக இருப்பதால்தான் இன்றளவும் தொடர்கிறது. வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில், தமிழர்கள் மீது ஆரியம் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இப்போது, இந்திய அரசு தமிழகத்தின் மீது நடத்திக் கொண்டிருப்பது நீர் முற்றுகை. பகை நாட்டிற்குப் பாயும் ஆற்றை மறித்து நீர் கிடைக்காமல் செய்து, கோட்டையில் இருப்பவர்களைச் சரணடையச் செய்வது போல, தமிழகத்தின் ஆறுகளை இந்திய அரசு முடக்குகிறது. இதன் அடிப்படை இனப்பகைதான், ஆரியக் காழ்ப்புணர்வுதான் என்ற அடிப்படைப் புரிதலைப் பெற்றாக வேண்டும்.

இந்திய அரசுதான் இனப்பகை உணர்வுடன் இப்பிரச்சினையைக் கையாளுகிறது என்பதால், இந்திய உச்சநீதி மன்றமும் இதே ஆரிய இன உணர்வுடன்தான் இருக்கிறது. பல பிரச்சினைகளில் இந்திய அரசும், உச்சநீதிமன்றமும் இந்த உணர்வுடன் செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது.

காவிரிநீரில் தமிழகத்தின் பங்கைப் படிப்படியாக நீதிமன்றம் குறைத்து வந்திருக்கிறது. ஒரு காலத்தில் தமிழகம் 566 டி.எம்.சி. நீரைக் காவிரி ஆற்றில் பெற்று வந்தது. சராசரியாக 50 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 361.5 டி.எம்.சி. பெற்று வந்தது. 1991-இல் தீர்ப்பாயம் அளித்த இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. என்று நீரின் அளவு குறைக்கப்பட்டது. இறுதித் தீர்ப்பில் இது சரி செய்யப்படும் என்று நம்பினார்கள். 2007- இறுதித் தீர்ப்பில் தமிழகத்தின் பங்கு 192 டி.எம்.சி. என்று மேலும் குறைக்கப்பட்டது. இதை எதிர்த்துத் தமிழகம் மேல்முறையீடு செய்தது. மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இதை மேலும் குறைத்து தமிழகத்தின் பங்கு 177.25 டி.எம்.சி. என்று அறிவித்திருக்கிறது. இதையாவது கொடு என்று கெஞ்சிக் கிடக்கிறது தமிழகம்.

என்ன நடக்கிறது இந்த நாட்டில்? இருப்பதையெல்லாம் இழப்பதற்காகத்தான் இந்தியாவின் ஓர் உறுப்பு மாநிலமாகத் தமிழகம் இருக்கிறதா? இந்தியச் சட்டப்படிக் காவிரி நீரைப் பெற முடியாவிட்டால் சர்வதேசச் சட்டப்படிக் காவிரி நீரைப் பெற வேண்டுமே தவிர, இனஉரிமை நீரை விட்டுக் கொடுக்கத் தமிழக அரசுக்கு உரிமையில்லை.

இந்தியாவில் இருப்பவை ‘மாநிலங்கள்’ என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் அவை ‘தேசங்கள்’. ஆனால் இறையாண்மையை இழந்து கிடக்கின்றன.

சர்வதேச அளவில் ஏற்கப்பட்டுள்ள வரைமுறைப்படி, தமிழ்நாடு ஒரு தேசம். அதன் ஆறுகளைத் தன் விருப்பப்படி இந்தியா பறித்துக் கொள்ள முடியாது. தமிழக அரசும், தமிழகத் தலைவர்களும் காவிரி உரிமையைக் காக்க, இந்தியச் சட்டப்படியோ அல்லது சர்வதேசச் சட்டப்படியோ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஓர் ஆற்றுரிமையைப் பறிப்பதென்பது அதன் கரையில் தோன்றி வளர்ந்த ஒரு பண்பாட்டைக் கொல்லுவதாகும்; அந்த இனத்தைச் சிதைத்து வெளியேற்றி அவ்வினத்தைப் பிற தேசங்களில் அகதிகளாக அலைய வைத்துப் பிற இனங்களில் கரைத்து விடுவது ஆகும். இனி காவிரி ஆற்றுநீரை 177.25 டி.எம்.சி. வழங்கினாலும் அது அநீதிதான். இனி கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் வரவே வராது. முன்னமே காவிரிப்படுகையின் விளைநிலப் பகுதி 28 இலட்சம் ஏக்கரிலிருந்து 15 இலட்சம் ஏக்கராகக் குறைந்துவிட்டது. இந்திய உச்சநீதிமன்றம் நியாயம் வழங்காது. அது நியாயம் வழங்கினாலும், அதை இந்திய அரசு நடைமுறைப்படுத்தாது. தற்காலிகமாக நடைமுறைப்படுத்தினாலும் அந்த உரிமை மீண்டும் பறிமுதல் செய்யப்படும்.

ஆகவே, தமிழகத் தலைவர்கள் தமிழ்த் தேசத்தின் உணவுக் கோப்பையான காவிரிப்படுகையைக் காப்பாற்ற சர்வதேச அளவிலான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். நீர் உரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும்.

ஒரு நாள் உண்ணாவிரதம், வழக்கமான சாலை மறியல், வழக்கமானக் கடையடைப்பு -என்பது இன்றையச் சூழலில் போராட்ட முறையாகாது. வன்மமாகக் காவிரி நீரை மறுக்கும் இந்திய அரசின் நிர்வாக அலுவலகங்களைத் தமிழகமெங்கும் முடக்க வேண்டும். தமிழகத்தின், தமிழ்த்தேசிய இனத்தின் வளங்களான நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட எந்த வளத்தையும் இந்திய அரசு எடுக்கக் கூடாது. நெய்வேலி நிலக்கரியும், மின்சாரமும் தமிழகத்தைச் சேர்ந்ததே. இந்திய அரசுக்குத் தமிழகத்தின் எந்த இயற்கை வளங்கள் மீதும் கைவைக்க உரிமையில்லை.

இந்திய அரசுக்கு வரி கொடுப்பதை நிறுத்த வேண்டும். வரிகொடா இயக்கமும், ஒத்துழையாமை இயக்கமும் தொடங்கப்பட வேண்டும். இனிவரும் காலம் உரிமை மீட்புப் போராட்டக் காலமாக இருக்க வேண்டும். தமிழகம் முழுவதுமே போராட்டக் களமாக மாற வேண்டும். இந்திய தேசிய உணர்ச்சிப் பீறிடுகிறவர்கள் வேண்டுமானால் தமிழகத்தை விட்டு வெளியேறிக் கொள்ளட்டும். முதற்கட்டமாக, தமிழகத் தலைவர்கள் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நடத்தும் பொய்ப் போராட்டங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

#திமுக_பந்த் #திமுகமறியல்போராட்டம்#நதிநீர்_பிரச்சனைகள்#Unknown_river_issues #Tamilnadunews #Tamilnews#CauveryManagementBoard #modividittamilnadu

பேராசிரியர் த.செயராமன்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*