தினகரனா-திவாகரனா யாரை ஆதரிப்பார் சசிகலா?

ஜெயலலிதா மரணத்தின் பின்னர் சசிகலா வாழ்க்கை இந்த அளவுக்கு திசை மாறிப் போகும் என்பதை அதிமுகவினரே கற்பனை செய்து பார்க்கவில்லை. நம்பி முதல்வர் பதவியை ஒப்படைத்த எடப்பாடி பழனிசாமி கூண்டோடு சசிகலாவை கழட்டி விட்டு விட்டு தனி ராஜாங்கம் பண்ணத் துவங்கி ஓராண்டு ஆகி விட்டது. அவரது மைனாரிட்டி ஆட்சியை மோடி சர்க்கார் காப்பாற்றி வரும் நிலையில், இப்போது சசிகா குடும்பத்திற்குள்ளேயே குழப்பங்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை துவங்கி விட்ட தினகரனுக்கு சசிகலாவின் தம்பி திவாகரனும், ஜெய் ஆனந்தும் தினகரனை விமர்சித்து முழங்க, அவர்களுக்கு தஞ்சையில் வைத்து பதிலடி கொடுத்திருக்கிறார் தினகரன். அவரது ஆதரவாளரான வெற்றிவேல் விரிவாகவே அறிக்கை விட்டுள்ளார். ஆக மொத்தம் சசிகலா குடும்பத்திற்குள் குழப்பம் உருவாகி விட்டது.
இந்த குழப்பம் உருவாகி பல மாதங்கள் ஆகி விட்டாலும், நடராஜன் மறைவுக்கு சசிகலா பரோலில் வந்த போதுதான் இது வெளிப்படையாகவே தெரியவந்தது. இரு தரப்பிடமும் பரஸ்பர குற்றச்சாட்டுகளைக் கேட்ட சசிகலா கவலைகளோடு பரோலை முன்கூட்டியே முடித்து விட்டு சிறைக்குச் சென்றார்.
திவாகரனும், ஜெய் ஆனந்தும் தினகரனுக்கு எதிராக பேசினாலும் கூட அவர்களுக்கு அமைப்பு பலமோ தொண்டர் பலமோ இல்லை. ஆனால் தினகரனுக்கு அதிமுகவில் உள்ள கணிசமான ஒரு பிரிவினரின் செல்வாக்கும், தொண்டர் பலமும் இருக்கிறது. தவிறவும் சசிகலாவின் ஆசியோடுதான் தினகரன் கட்சி துவங்கினார். ஆர்.கே. நகரிலும் போட்டியிட்டார். அரசியல் ரீதியாக தினகரனுக்கு சசிகலாவின் முழு ஆதரவும் உண்டு என்றாலும், குடும்பத்தினர் இப்படி முரண்பட்டு நிற்பதை சசிகலா விரும்பவில்லை.
ஏற்கனவே குருமூர்த்தியோடு நடராஜனும், திவாகரனும் நேரடியாக மோதிய போது இருவரையுமே அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்ட சசிகலா இப்போதும் கூட அமைதியாக இருக்கும் படி அனைவரையும் கேட்டுக் கொண்டார். குடும்பத்திற்குள் உள்ள ஈகோ பிரச்சனைகளை வெளியில் பேசாதீர்கள் என்றும் சொல்லிச் சென்றதாக தகவல். ஆனாலும் பொதுவெளியில் விவாதிக்கும் வரை இந்த விவகாரம் வந்து விட்டதால் விரக்தியடைந்திருக்கும் சசிகலா அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் இருந்தும் ஒதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதாக அவரது குடும்ப பின்னணி தெரிந்தவர் நம்மிடம் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*