S.V.சேகர் முன்ஜாமீன் மனு விசாரணையின் போது நடந்தது என்ன?

பத்மா சுப்பிரமணியம் அவர்களே வேண்டாம் இந்த படுபாதகம்:சாவித்திரிகண்ணன்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக முதலிடம்!

பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த நடிகர் S.V.சேகரின் முன் ஜாமீன் மனு 352-ம் எண்ணாக நீதிபதி ஜெகதீஷ் சந்திராவின் 39-வது நீதிமன்ற அறையில் இன்று பட்டியலில் இருந்தது.வழக்கு எண் அறிவிக்கப்பட்டதும் சேகர் தரப்பி்ல் மூத்த வக்கீல் ரகுநாதன் எழுந்து நீதிபதியிடம் “கடந்த முறை நீங்கள் பதில் மனு தாக்கல் செய்யச் சொன்னீர்கள்…” என்றார்.

உடனே மற்ற வக்கீல்கள் எழுந்து “நாங்கள் இடைநிலை மனு மூலம் (Intervene petition) எங்கள் ஆட்சேபணையைச் சொல்லியுள்ளோம் அதையும் இத்தோடு சேர்த்து விசாரிக்க வேண்டும்…” என்றனர்.பெண் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் வந்திருந்து, “நாங்களும் அது போல் மனு தாக்கல் செய்துள்ளோம் எங்கள் தரப்பையும் விசாரிக்க வேண்டும்…” என்று பெண் வழக்கறிஞர்கள் சங்க செலாளர் ஆதிலட்சுமி கூறினார்.

சென்னை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் தலைவர் அன்பழகனின் வக்கீல் குமாரதேவன், “இந்த வழக்கில் நான் இரண்டு இடைநிலை மனுக்கள் தாக்கல் செய்து அது பட்டியலில் உள்ளது. நான் வாதாட தயார்…” என்றார்.புகார்தாரரின் வக்கீல், பாதிக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளாரின் வக்கீல் என்று பலரும் இது போலவே கூறினார்கள்..

அனைத்தையும் கேட்ட நீதிபதி சேகரின் வக்கீல் ரகுநாதனிடம், “கடந்த வழக்கு விசாரணையில் நீங்கள் இல்லை. அப்போது நான் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. பதில் மனு தாக்கல் செய்யத்தான் இன்று வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் பல இடைநிலை மனுக்கள் வந்திருக்கும்போது எல்லாவற்றையும் விசாரிக்காமல் முடிவெடுக்க முடியாது. இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது..” என்றார்.

உடனே ரகுநாதன் “7 மனுக்கள்தான் இன்று பட்டியலில் உள்ளன. ஆனால் 4 மனுக்களைத்தான் எங்களிடம் கொடுத்துள்ளார்கள்…” என்றார். உடனே வக்கீல்கள் “நாங்கள் எல்லாம் முறைப்படி எங்கள் மனுக்களை சேகர் தரப்புக்கு கொடுத்துவிட்டே தாக்கல் செய்துள்ளோம்…” என்றார்கள்.

நீதிபதி,மீண்டும் “நான் இந்த வழக்கில் எந்த உத்தரவும் போட முடியாது. நீங்கள் எதிர்வரும் எந்த விடுமுறைக் கால நீதிமன்றத்தையும் அணுகி உத்திரவு வாங்கிக் கொள்ளலாம். இல்லை என்றால் நான் கோடை விடுமுறை கழித்து விசாரணையை ஒத்தி வைக்கிறேன்….” என்றார்.

உடனே சேகரின் வக்கீல் சத்தியா மூத்த வக்கீல் ரகுநாதனிடம் “அப்படியானால் அதுவரை கைது செய்யக் கூடாது என்ற உத்தரவை வாங்குங்கள்…” என்றார்.

இதற்கு ரகுநாதன், “நீதிபதிதான் எந்த உத்தரவும் கொடுக்க முடியாது என்கிறாரே.. நான் எப்படி மீண்டும் கேட்க முடியும்..? வேண்டுமானால் மீண்டும் கேட்கிறேன்..” என்று சொல்லிவிட்டு நீதிபதியை நோக்கி “அதுவரை…” என்று ஆரம்பித்தார்.

ஆனால் அதற்குள்ளாக குறுக்கிட்ட நீதிபதி, “நான் இந்த வழக்கில் அப்படி எந்த உத்தரவும் போட முடியாது. நான் ஏற்கெனவே சொன்னதுபோல் எந்த கோடை விடுமுறைக் கால நீதிபதியிடமும் அணுகி உத்தரவு வாங்கிக் கொள்ளுங்கள்…” என்று கூறிவிட்டு அடுத்த வழக்கைக் கூப்பிடுங்கள் என்று கூறி முற்றுப் புள்ளி வைத்தார்.’செத்தான்டா சேகரு’ என்று சேகருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று வாதாட வந்த வக்கீல்கள், பேசிக் கொண்டு வர, சேகர் தரப்பு வக்கீல்களோ, ‘அதிர்ஷ்டவசமாக இந்த வழக்கு கோடை விடுமுறை கழித்துப் போடாமல் விட்டார்களே. அதுவரைக்கும் சந்தோஷம்… கோடை விடுமுறைக் கால நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று பேசியபடியே கலைந்து சென்றார்கள்.

S.V.சேகரைக் கைது செய்ய உயர் நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. கையலாகாத போலீசார் என்று சேகரால் நாமகரணம் சூட்டப்பட்ட போலீசாரின் நடவடிக்கை இனிமேல் இந்த விஷயத்தில் எப்படி இருக்கும் என்று இனிமேல் பார்க்கலாம்.கொசுறு செய்தி : கோடை விடுமுறைக் கால முதல் அமர்வில் முன் ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் நீதிபதி திருமதி இராமத்திலகம். முதல் அமர்வின் விசாரணை நாள் 03-05 – 2018 வியாழக்கிழமை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*